பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

சைவ இலக்கிய வரலாறு


பழைய நூலாட்சியும் பழமொழியும்

முன்னோர் மொழி பொருளேயன்றி அவருடைய மொழிகளையும் மேற்கொண்டாளுவது சான்றோர் இயல்பன்றோ. சங்க நூல்கள், கொடை வள்ளல்களுட் சிறந்தோனாக வேள் பாரியைக் கூறுகின்றன. அச்செய்தியை நம்பியாரூரர் மேற்கொண்டு, “கொடுக்கிலா தானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலர்”[1] என்று எடுத்தோதுகின்றார், புலவரைப் பேணும் தக்கோரைப், “புலவர் புக்கில்” [2] என்று பண்டை நாளைச் சங்கச் சான்றோர் பாராட்டினர். அக்கருத்தையும் நம்பியாரூரர், “நொய்ய மாந்தரை விழுமிய தாயன்றோ புலவோர்க்கெலாம் என்று சாற்றினும் கொடுப்பாரில்லை”[3] எனக் கூறுகின்றார். நீர்ப் பறவையினத்துள் ஒன்றான நாரையைச் சங்க நூல்கள் “தினைத்தாளன்ன சிறுபசுங்கால”[4] என்றனவாக, நம்பியாரூரர் அச் சொற்றொடரையே மேற்கொண்டு “தினைத்தாளின்ன செங்கால் நாரை சேரும் திருவாரூர்”[5] எனத் தம்முடைய திருப்பாட்டில் அமைத்துப் பாடுகின்றார்.

இனி, ஆசிரியர் தொல்காப்பியனார், “விருந்தே தானே புதுவது கிளந்த யாப்பின் மேற்றே”[6] என்றாராக, நம்பியாரூரர், தாம் பாடுவன அவ்விருந்து என்னும் யாப்பின் பாற்படும் என்பது தோன்ற, “விருந்தாய சொன் மாலை கொண்டேத்தி”[7] என உரைத்தருளுகின்றார். திருவேரகத்தில், அந்தணர்கள் நீராடி “விரையுறு நறுமலரேந்தி”[8] வழிபாடு செய்வரென நக்கீரனார் திருமுருகாற்றுப்படையில் எடுத்தோதினார்; அக்கருத்தே விளங்க, நம்பியாரூரர், திருக்கருப்பறியலூர்த் திருப்பதிகத்தில், “முட்டாமே நாடோறும் நீர்மூழ்கிப் பூப்பறித்து மூன்று போதும், கட்டார்ந்த இண்டை கொண்டு அடிசேர்த்தும் அந்தணர் தம் கருப்பறியலூர்”[9] என்று பாடியுள்ளார்.


  1. சுந். தே. 34: 1.
  2. புறம். 375.
  3. ௸ 34 : 7.
  4. குறுந். 25.
  5. ௸ 95 : 6.
  6. தொல். செய்யு. 239.
  7. ௸ 30 : 4.
  8. முருகு. 288.
  9. ௸ 30:3.