பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நாட்டு வரலாறு

15

வேதியருக்கும்.சமணருக்கும் இருந்த பகைமையேயெனவும், அதனால் சமணர் தென்னாட்டில் செல்வாக்குப் பெறுவது அரிதாயிற்றெனவும் வரலாற்றறிஞர் கருதுகின்றனர்.

விக்கிரமன் என்னும் வேந்தன் இறந்தானாக, கி.பி. 525 அளவில், பூஜ்யபாதர் என்பவருடைய மாணவரான வச்சிரநந்தியென்பவர் ஒரு சமண் சங்கத்தை நிறுவினர்.[1] தேவசேனரென்பார் எழுதிய “திகம்பர தரிசன சாரம்” என்னும் நூல், அச்சங்கம் தென்மதுரையில் நிறுவப் பட்டதெனக் கூறுகிறது. இச்சங்கத்தின் வாயிலாகச் சமண் சமயம் தென்னாட்டிற் பரவிற்றென்பர்.

“உலோக விபாகம்” என்றொரு சமண நூல் மைசூர் கல்வெட்டுத் துறையினரால்[2] கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைப் படியெழுதியவர், தான் பாண நாட்டுப் பாடலிகையில் இருந்து எழுதியதாக அதன்கட் குறித்துள்ளார். அதனைக் கண்ட திரு. நரசிம்மாச்சாரியார், “பாடலிகா” என்பது இப்போதுள்ள திருப்பாதிரிப்புலியூர் என்று குறிக்கின்றார். திருப்பாதிரிப்புலியூர்[3] வடகரைச் சோழ நாட்டைச் சேர்ந்த தாகலின், உலோக விபாகத்துட் கண்ட பாடலிகா வேறு போலும் என நினைக்க இடமுண்டாகிறது. இந்நிலையில் திருமதி மீனாக்ஷியம்மையார் பண்ணுருட்டி யென்பது பாணுருட்டி யென்பதன் மரூஉவாக இருக்கலாமென நினைத்து அதற்கு அண்மையிலுள்ள பாதிரிப்புலியூர் ஒரு காலத்தே பாண நாட்டிலிருந்திருக்கலாம் எனக் கருதுகின்றார். அது பொருத்தமாகவும் உளது.

சங்ககாலத்தில் சித்தூர் மாவட்டத்தின் கீழ்ப்பகுதி பாணனாடாக இருந்தது. இதனை “வடாஅது, நல்வேற் பாணன் நன்னாடு”[4] என மாமூலனரென்னும் சங்கச்


  1. 1. J. B. B. R. A. S. Vol. XVII. P. i. p. 74.
  2. 2. My. A. R. 1909-10. p. 45.
  3. 3. “வடகரை ராஜேந்திர சோழவளநாட்டு மேற்காநாட்டுப் பிரமதேயம் திருப்பாதிரிப்புலியூர்” (S.I.. Vol. VII. No. 743).
  4. 4. அகநானூறு. 325.