பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

சைவ இலக்கிய வரலாறு

 அவ்வூர்க் கல்வெட்டுக்கள்1 உரைக்கின்றன. திருவாரூர்,2 திருவிடைமருதூர்3 முதலிய பல இடங்களிலுள்ள கல்வெட்டுக்கள் நம்பியாரூரரை ஆளுடையநம்பி யெனவே சிறப்பித்துரைக்கின்றன.

திருவெண்ணெய் நல்லூரில்உள்ள இறைவன் நம்பியாரூரரைத் தடுத்தாட்கொண்ட சிறப்பு, நாட்டில் நன்கு பரவியதும் இறைவனைத் தடுத்தாட்கொண்ட நாயனார் என்று சான்றோர் வழங்கலுற்றனர். முதல் இராசராசன், அவன் மகனான முதல் இராசேந்திரன் முதலியோர் காலம்வரை வெண்ணெய் நல்லூர் இறைவனுக்குத் திருவருட்டுறையுடைய மகாதேவர்4 என்ற பெயரே வழங்கிவந்தது. அவர்கட்குப் பின்வந்த வேந்தர்காலத்தில் தடுத்தாட்கொண்ட தேவர்5 என்றும் ஆட்கொண்ட தேவர் என்றும் பெயர்கள் வழங்கலாயின. இவ்விறைவன் பால் அன்பு பூண்டோர் தம் மக்கட்கும் இப் பெயரையிட்டுப் பேணினர். நெற்குன்றம் என்னும் ஊரில் வணிகனொருவனுக்குத் தடுத்தாட்கொண்டான்'6 என்ற பெயரும், மாறங்கியூரில் தேவேந்திர வல்லப பிரமாதிராயன் மடத்தைக் கண் காணித்து வந்த ஒருவற்குத் தழுவக் குழைந்தான் தடுத் தாட்கொண்டான்7 என்ற பெயரும் வழங்கின. நம்பியாரூரர், தாம் ஆளென உணர்ந்து அன்புமிக்கு இறைவனைப் பாடத்தொடங்கியபோது இறைவன் அவரைப் பித்தன் என்று பாடுமாறு பணித்தருளின வரலாற்றை நினைவு கூரு முகத்தால் பிற்காலச் சான்றோர் இறைவனைப் "பிச்சனென்று பாடச்சொன்னன்"8 என்ற ஒரு சிறப்புப் பெயரையும் கூறிப்பரவினர் எனக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.


1. S I. I. Vol. V. No. 135-8; A. R. No. 371 of 1911.
2. S I.I.Vo!.VIII.No.485.
3. A R. No. 302 of 1907.
4. S .I.I.Vol.VII.No.938.
5. Ibid. No.939 No.211of1934-
6. A.R.No. 96 of 1935-6. .
7. A.R.No No. 95 of 1936-6.
8. S.I I. Vol. XII. No. 231.