பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் பெருமாள்

249

முடிசூட்டு விழா நடைபெறுங்கால் தெருவில் தான் சுமந்து வந்த உவர்மண் ணூறி உடல் வெளுத்துத் தோன்றிய வண்ணானொருவனைக்கண்டு அவனை வெண்ணீறண்ணியும் உண்மை யடியாரெனக் கருதி அவன் அடியில் வீழ்ந்து வணங்கிச் சிவனடியார்பால் தனக்கிருந்த அயரா அன்பைப் புலப்படுத்தினர். என்றும் போல் அவர் செய்த சிவவழிபாடு சிறப்புற நடந்து வந்தது; அவ் வழிபாட்டிறுதியில் தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடும் இறைவனது திருவடிச் சிலம்போசை கேட்கப்பெற்று உள்ளங்குளிர்ந்து உவகை மிகுந்தார்.

ஒருகால் மதுரையிலிருந்து பாணபத்திரன் என்னும் இசைப்புலவன் பொருள் வேண்டி இறைவன் தந்த திருமுகப் பாசுரத்தை எடுத்துக் கொண்டு பெருமாக் கோதையாராகிய சேரமான் பெருமாளிடம் வந்து காட்டினன்: அதுகண்ட சேரமான் பேரன்பால் தன் அரசியற் செல்வமனைத்தையும் அப்பாணனுக்கு நல்கினர்; ஆயினும்: பாணபத்திரன் தான் வேண்டு மளவே பெற்றுச்சென்றான்.

பின்பொருநாள், சேரமான் சிவ வழிபாட்டிறுதியில் இறைவனது திருச் சிலம்போசை கேட்கத் தாழ்த்தது. சோமான் பெருவருத்த மெய்திக் கலங்குகையில் திருச்சிலம்போசை யுண்டாயிற்று. ஓசை தாழ்த்தமைக்குக் காரணம் கூறுவாராய்த் தில்லையில் நம்பியாரூரர் வந்து திருப்பதிகம் பாடிப் பரவும் திறம் அறிவித்துச் சேரமானைச் சோழநாடு சென்று நம்பியாரூரரைக் காணுமாறு குறித்தருளினர். அதன்பின் சேரமான் தில்லைக்கு வந்தார்: இறைவனை வணங்கிப் பொன் வண்ணத் தந்தாதி என்னும் நூலைப்பாடிப் பரவினர்.

சேரமான் பெருமாள், நம்பியாரூரர் திருவாரூரில் இருப்பதறிந்து திருவாரூர்க்குச் சென்றார் வரவுணர்ந்ததும் நம்பியாரூரர் ஆர்வம் மிகுந்து அரசரை வரவேற்று இறைவன் அருட் குறிப்பை வியந்து பாராட்டினர். இருவரும் ஒருவரொருவரிற் கலந்த ஒருமை நண்பின் உருவாயினர்.