பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரமான் பெருமாள்

251

அழையாமே நிவிர் வரக் காரணம் யாது?” என்று வினாவா நிற்ப், “அடியேன் நம்பியாரூரர் வந்த யானையின் முன் சேவித்து வந்தேன்; வந்தவிடத்து நின் அருள்வெள்ளம் என்னை யீர்த்துக் கொணர்ந்து திருமுன் நிறுத்தியது” என்று செந்தமிழ் நாவளம் சிறந்து விளங்கச் செப்பினார். அது கேட்டு மகிழ்ந்த இறைவன் திருமுன், சேரமான் தான் பாடிய ஆதியுலா என்னும் நூலை அரங்கேற்றி அப்பெருமானருளால் சிவகணங்கட்குத் தலைவராம் சிறப்புப் பெற்றார்.

வரலாற்றாராய்ச்சி

பண்டை நாளில் சேரநாடு, குட்டநாடு, இரும் பொறை காடு, குடநாடு என மூன்று பிரிவாக நிலவிற்று. குட்ட காட்டு வஞ்சிநகரே சேரநாடு முழுதுக்கும் தலைநகர். ஒவ்வொரு நாட்டுக்கும் அரசர் உண்டெனினும், ஒருவர் சேர நாட்டு முடிவேந்தராகிய போது ஏனை இருகாடுகளின் அரசர் இருவரும் அம் முடிவேந்தர் கீழ் அரசு புரிவர். அதனால் சேரவேந்தருள் குட்டுவரும் பொறையரும் குட வரும் காணப்ப்டுகின்றனர். முடிசூடும் வேந்தனே சேரமான் என விளங்கினன். சேரமான் பெருமாள் என்பது மிகவும் பிற்கால வழக்கு. தமிழ்நூல் வழக்குகளில் சேரமான் பெருமாள் என்ற வழக்குக் கிடையாது. மேலே கூறிய வழக்கும் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டோடு நின்று போயிற்று. [1]

பெருமாக் கோதையார் இளையராய்த் திருவஞ்சைக் களத்தில் இருக்கையில் சேரமான் செங்கோற் பொறையன் ஆட்சி செய்தான்; அவன் பெயரே அவன் இரும்பொறை நாட்டு அரசர் குடியில் தோன்றினவன் என்பதை உணர்த்துகிறது. அவன் துறவு பூண்டு அரசு துறந்து சென்றபோது சேரவரசுக்கு உரிமை பெற்ற நெருங்கிய தொடர்புடையார் அவன் குடியில் ஒருவரும் இலராயினர்; ஆதலால்


  1. சேரமான் பெருமாள்களுள் இறுதியில் இருந்த சேர மான் பெருமாள் காலம் கி. பி. 428 என்று கூறுகின்றனர். T. St. Manual Vol. II. LI &. 44.