பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரமான்பெருமாள்

253

“மலைமண்டலத்து மகோதையார் பட்டினத்து ஈராயிரவன் சிறியன்”1 என நின்று, மகாதேவர் பட்டின2 மெனவும் மகோதையார்புரம்'3 எனவும் வேறுவேறு வகையில் வழங்கி வந்தது. இக்குறிப்பறியாத சிலர், இது வடநாட்டு மகோதயம் என்னும் ஊரின்நினைவுக் குறியாக வழங்கியது4 எனக் கருதலாயினர். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன் கொங்கரை வென்று கொங்கு நாடு கடந்து குடபுலிமான மேலைக் கடற்கரையை அடைந்து கருவூரை யெறிந்து வஞ்சிநகர் முற்றத்திற் பெரும் போர் உடற்றித் தான் பெற்ற வெற்றிக்குக் களனாதலால் அதனை வஞ்சிக் கள்ம் என மாற்றினன்.5 அக்காலத்தே காவிரிக்கரையில் இப்போது உள்ள கருவூர் வஞ்சிநகர் என்ற பெயர் கொண்டு நின்றது.6 அதன் அருகே ஒடும் ஆறு ஆன் பொருநை எனப்பட்டது. சேரர் வஞ்சி வஞ்சிக்களமென மாறியதனால் காவிரிக்கரைக் கருவூரை, வஞ்சியான கருவூர் எனப் பெயரிட்டு வழங்கலாயினர் அன்று முதற் கல் வெட்டுக்கள் அதனைக் கருவூரான வஞ்சிமாநகர் 7என்று குறிக்கலுற்றன. அக்காலத்துத் தோன்றிய வஞ்சிக்களம் பின்பு அஞ்சைக்கள மென மருவிற்று8 அவ்வூர்க் கல்வெட்டுக்கள் அதனைத் திருவஞ்சக்களம்'9 என்று கூறு கின்றன.


1. Epi, Indi. Vol. VII. p. 198.
2. W. Logan's Malabar. p. 207.
3. G & Fä35&lb published in the Travancore Archeological Series.
4. T. A. S. Vol. II. p. !I.
5. புறம், 373.
6. வஞ்சிமா நகர்க்கு வடக்கில் மேலைக் கடற்கரையில் கரு வூர்ப்பட்டினம் என்றோர் ஊர் சங்ககால முதலே இருந்து வருகிறது. அந்தக் கருவூரின் நினைவுக் குறியாகச் சேரமன்னர் கொங்கு நாட்டைத்

தமது ஆட்சியில் அடக்கியபோது காவிரிக் கரையில் இந்நகரை வஞ்சியெனப் பெயரிட்டனர். அதுவே பின்பு கருவூர் எனப் பெயர் மாறியது.

7. A.R. No. 335 of 1928
8 சுந். தே. 4. 1-10.
9.S l.l Vol. V. No. 789.