பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரமான் பெருமாள்

267


இவ்வண்ணம் உயிர்கள் நுகர்தற்குரிய இன்பத்துக்கு அகத்தும் புறத்தும் தடை விளைக்கும் பகைப்பொருள்களைக் கடிந்தருளும் இறைவன், யாவும் பகைமையின்றி நட்பால் ஒன்றியிருக்கும் செயலொன்றையே பெரிதும் விழைவன், அவன் திருமேனியிற் காணப்படும் பொருள்களை இவ்வுண்மையை வற்புறுத்துகின்றன; இதனை, “ஆர்க்கின்ற நீரும் அனலும், மதியும் ஐவாயரவும் ஒர்க்கின்றயோகும் உமையும், உருவும் அருவும் வென்றி பார்க்கின்ற வேங்கையும் மானும் பகலும் இரவும் எல்லாம், கார்க்கொன்றை மாலேயினர்க்கு உடனுகிக் கலந்தனவே”[1] என்று பாடுகின்றார்.

இவ்வண்ணம் தம்மிற் பகைத்து மாறுபட்டு நிற்பனவும் தன்பால் மாறுபாடின்றி ஒன்றி நிற்கப் பண்ணும். அருட் செயலால், விழைவு விடுத்த விழுமியோர் உள்ளத்தும் இறைவன்பால் தீராவேட்கை எழுந்து அவனை இன்றியமையாத நிலையைப் பயந்து விடுகிறது.

2. திருவாரூர் மும்மணிக் கோவை

சேரமான் நம்பியாரூரருடன் உயர்காதல் நண்பராகி அவரோடே சென்று திருவாரூர் இறைவனைக் கண்டு பணிந்து வழிபட்டு, அவ்விறைவன் பேரில் தாம் பாடிய திரு மும்மணிக் கோவையை நம்பியாரூரர் கேட்க அரங்கேற்றம் செய்தார் என்பது வரலாறு. சேக்கிழாரும் “திரு மும்மணிக் கோவை நாவலூரர் தம் முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்”[2] என்று எடுத்துரைக்கின்றார்.

இம் மும்மணிக் கோவை முப்பது பாட்டுக்களையுடையது. இவை யாவும் அகப்பொருள் நெறியிலேயே அமைந்திருக்கின்றன. திருவந்தாதியினும் ஐம்பது பாட்டுக்கள் இந்நெறியிலே இயன்றுள்ளன. இவர் மேற்கொள்ளும் அகத்துறையில் அகனைந்திணைக் குரியன சிலவும் கடவுண் மாட்டு மானிடப்பெண்டிர் நயந்த பக்கத்தன பலவுமாகும்.


  1. பொன் வண். 50.
  2. பெரியபு. கழறிற். 69.