பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேரமான் பெருமாள்

281

பால் தான் காணப்படுகிறது. திருவுலாவின்கண் அரிவைப் பருவத்தாளது ஒப்பனையைக் கூறுமிடத்து,

“இல்லாரை யெல்லாரும் எள்குவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பென்னும்–சொல்லாலே
அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து—நல்கூர்

இடையிடையே யுள்ளுருகக் கண்டாள்”[1]

என்று கூறினாராக, இதனைக் கண்ட திருத்தக்கதேவர், தாம் செய்த சீவக சிந்தாமணியில் இக்கருத்தையே வைத்து அமைத்துக்கொள்கின்றார். சீவகன் நகரவீதியில் உலாவந்த போது மகளிர் பலர் தம்மை ஒப்பனை செய்து கொண்டு தெருவில் வந்து நின்று அவனை நோக்குகின்றனர். அவ்வாறு வந்த மகளிரின் ஒப்பனையைக் கூறவந்த திருத்தக்கதேவர்,

“செல்வர்க்கே சிறப்புச்செய்யும்
     திருந்துநீர் மாந்தர்போல
அல்குற்கும் முலைக்கும் ஈந்தார்
     அணிகலமாய வெல்லாம்
நல்கூர்ந்தார்க்கில்லை சுற்றம் என்று
     நுண்ணுசுப்பு நைய
ஒல்கிப்போய் மாடஞ்சேர்ந்த

     ஒரு தடங் குடங்கைக்கண்ணார்” [2]

என்று பாடுகின்றார்.

இச் சேரமான் “வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம்”[3] என்றலின், பொன்வண்ணத் தந்தாதி பாடி அரங்கேற்றிய காலத்தில் மூப்புப்பருவம் எய்துகின்ற நிலையில் அவர் இருத்தலைக்காண்கிறோம்.


  1. ஞான வுலா, 136 : 8
  2. சீவக. 2535.
  3. ஞான வுலா 21.