பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏனாதி சாத்தஞ் சாத்தனார்

283

நிகழ்ச்சி கூறும் செப்பேடு வேள்விக்குடிச் செப்பேடு! என்று இன்றும் வழங்குகிறது.

நெடுஞ்சடையன் அரசவையில் நிகழ்ந்த இவ்வழக்கினை நேரிற்கண்டும் வேள்விக்குடியின் தொன்மை நலத்தைக் கேட்டும் வியப்புற்ற நம் ஏனாதி சாத்தஞ் சாத்தனார் இச்செப்பேட்டில் வரும் தமிழ்ப் பகுதியாகிய பாண்டிவேந்தன் நெடுஞ்சடையனுடைய குடிவரவும், வேள்விக்குடி நிகழ்ச்சியும் பிறவும் கூறும் இனிய பாட்டினைப் பாடியுள்ளார். இதன் நலங்கண்ட சான்றோர் இதற்குப் பரிசாக இச்சாத்தனார்க்கு வேள்விக்குடி வருவாயில் ஒரு கூற்றினை வழங்கி அச்செப்பேட்டிலும் உடன் பொறித்தனர். இதனையே வேள்விக்குடிச் செப்பேடு, “இப்பிரசஸ்தி பாடின சேனாபதி ஏனாதியாயின சாத்தஞ் சாத்தற்கு மூன்று கூற்றாருமாய்த் தங்களோடு ஒத்த நான்கு படாகாரம் கொடுத்தார்”[1] என்று கூறுகிறது: இச் செப்பேட்டின் தொடக்கத்தில் வடமொழியில் பிரசஸ்தியொன்று வரோதயபட்டர் என்பவரால் பாடப் பெற்றுளது; எனினும், அவர்க்குப் பரிசொன்றும் குறிக்கப் பெறாமையே, இச் சாத்தனாரது புலமை அந்நாளைச் சான்றோர்களால் பெரிதும் மதித்துப் போற்றப் பெற்றது என்றற்குச் சான்று பகருகின்றது.[2] இவரது பிறந்தவூர் இன்னதெனத் தெரிந்திலது. இவர் பாடியனவாக வேறு நூல்கள் கிடைத்தில.

ஏனாதி சாத்தஞ் சாத்தனார் பாண்டியன் பராந்தகன் நெடுஞ்சடையன் காலத்தில் இருந்தவர்; அவ்வேந்தன் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் இருந்தவனென ஆராய்ச்சியாளர் துணிந்துள்ளனர்.[3] எனவே, இவர் காலமும் கி. பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியாதல் தெளிவாம்.


  1. Ep. Indi. Vol. XVII, No. 16.
  2. Ep. Indi. Vol. XVII. No. 16. p. 303. வரி. 139-41.
  3. Ep. Indi, Vol. XVII. p. 295, The date of the Velvikudi Grant naust be about A. D. 769-70 which is the date of the Anaimalai inscription.