பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

சைவ இலக்கிய வரலாறு

தல் வேண்டும் எனக் குறையிரங்து நின்றனர். திருவாதவூரர், அவர்களை அழைத்துக்கொண்டு தில்லையம்பலத்துக்குச்சென்று அங்கே திருக்கூத்தாடியருளும் அம்பலவாணர் முன்னே நின்று, இந்நூலுக்குப் பொருள் இவரே" என்ச் சுட்டிக்காட்டினர்; அப்போது அங்கே ஒரு திப்பிய சிவப் பேரொளி எழுந்தது ; அத்திருவருள் ஒளியில் மணிவாசகனார் கலந்து மறைந்தார். அவர் அருளிய திருவாசகமும் திருக்கோவையாருமே எஞ்சின.

வரலாற்றாராய்ச்சி

திருவாதவூரரது வரலாறு காண்பதற்குத் திருவாலவாய் உடையார் திருவிளையாடல், பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணம், திருவுத்தர கோசமங்கைப் புராணம், திருப்பெருந்துறைப் பழைய புராணம், திருவாதவூரர் புராணம், திருப்பெருந்துறைப் புதிய புராணம் என்பன துணையாகின்றன. இவற்றின் வேறாகக் கடம்பவன புராணம், சுந்தரபாண்டியம், கல்லாடம் முதலிய நூல்களும் உள்ளன. இவற்றுள் காலத்தால் முற்பட்டது திருவாலவாயுடையார் . திருவிளையாடற் புராணம்; அதுதோன்றியது. புதின்மூன்றாம் நூற்றாண்டாகும். காலத்தாற் பிற்பட்டது திருப்பெருந்துறைப் புதிய புராணம்; அதன்காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி இதனை இயற்றியவர் திருவாவடுதுறை ஆதீன மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். பிற்கூறிய நூல்களுள் கடம்பவன புராணத்து இலீலாசங்கிரக அத்தியாயத்திலும், திருவுத்தர கோசமங்கைப் புராணத்துப் பார்ப்பதி தவம்புரிந்த அத்தியாயத்திலும், மாணிக்கவாசகர் வரலாறு காணப்படுகிறது. சுந்தரபாண்டியம் என்ற நூலின் இறுதிப்பகுதி கிடைக்காமையால் மாணிக்கவாசகர் வரலாறு அதன்கண் காணப்படுகின்றிலது. கல்லாடத்துச் சில அகவல்களில் திருவாதவூரருடைய வரலாற்றுக் குறிப்புக் காணப்படுகிறது. இக்கல்லாடம் காலத்தால் பழைமையான தென்பது வழக்கம்.