பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாணிக்கவாசகர்

295

பிறப்பு

திருவாதவூரர் பாண்டிநாட்டுத் திருவாதவூரிற் பிறந்தவரென்பது எல்லா நூலார்க்கும் ஒப்ப முடிந்த உண்மை. இவர் முற்பிறப்பில் சிவகணநாதருள் ஒருவராயிருந்தார் என்றும் பின்னர்த் திருவாதவூரில் அமாத்தியர் குடியில் தோன்றினர் என்றும் திருவாலவாயுடையார் திருவிளையாடல்[1] கூறும்; அதனைக்கடம்பவன புராணமும்[2] எடுத்து வற்புறுத்துகிறது.திருவுத்தரகோசமங்கைப்புராணம் இம்முற்பிறப்பு வரலாற்றை விரியக்கூறுகின்றது. இவர் பிறந்த ஊரைப்பொறுத்தவரை அறிஞர்களிடையே கருத்து வேற்றுமை இல்லை ; ஆயினும் இவருடைய தந்தை பெயர் சம்புபாதாசிருதர் என்றும் தாய் பெயர் சிவஞானவதியென்றும் திருப்பெருந்துறைப் புராணம்கூறுகிறது; ஏனை எந்நூலும் அதனைக் கூறவில்லை. அவர் காலத்தே மதுரையில் இருந்து ஆட்சிபுரிந்த பாண்டியன் இன்னானென வேறு நூல்கள் கூறாதிருப்பவும், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் மாத்திரம் திருவாதவூரர் காலத்துப்பாண்டியன் அரிமர்த் தனன் எனப்படுவன் என்று இயம்புகின்றது.

இனி குதிரை வாங்குவது பற்றிய நிகழ்ச்சியில், உள்ள குதிரைகளுட் பல நோயுற்று இறந்தன; சிலவே இருந்தன. என்றும் வேறுபல நோயுற்றிருந்தன என்றும், எனவே புதியவாய்க் குதிரைகள் வாங்கவேண்டும் என்றும் ஓரிலட்சம் குதிரைகளாவது நிலவேந்தர்பால் இருத்தல் இன்றியமையாது என்றும் குதிரைக் காவலர் கூற, வேந்தன் உரிய அளவு பொன் தந்து திருவாதவூரரைக் குதிரை வாங்கிவர விடுத்தானென்றும் தெரிவிக்கும் முகத்தால் திருவாலவாய் உடையார் திருவிளையாடல் வேறுபட்டுரைக்கின்றது.

குதிரை வாங்குதற்குச் சென்ற திருவாதவூரர், திருப் பெருந்துறைக்குச் சென்று சேருமுன், திருக்கானப்பேர் சென்று சிவபெருமான வணங்கிக்கொண்டு சென்றார் எனவும், திருப்பெருந்துறையைச் சேர்ந்தபோது, அங்கே


  1. திருவால. திருவிளை. 27:6.
  2. கடம்ப. இலீலா. 27,