பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

சைவ இலக்கிய வரலாறு


நியது என்றும், திருமங்கையாழ்வாரும் குலசேகர ஆழ்வாரும் தில்லைத் திருச்சித்திரகூடத்தைப் பாடியிருக்கும் திறத்தை யெடுத்துக்காட்டி, அவர் பாட்டுக்களால் அச்சித்திரகூடம் அவர்கள் காலத்தே புதுவதாக எடுக்கப்பட்ட, தெனத் தெரிகிறதென்றும், திருமங்கையாழ்வார் காலத்தவனை நந்திவன்ம பல்லவமல்லனே இச் சித்திரகூடத்தைக் கட்டியிருக்கவேண்டும் என்றும், அவன் காலம் கி.பி.710 - 775 என்றும், எனவே அடிகள் காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்பேயாம் என்றும் கூறுகின்றார்.

எல்லாச் சிவன் கோயில்களிலும் சிவனே நடுவில் வைத்துச்சுற்றிலும் ஐந்து நிலங்கட்கு முரிய முருகன், திருமால், துர்க்கை, இந்திரன், வருணன் என்ற தெய்வங்களைப் பரிவாரமாக நிறுவுவது பண்டையோர்மரபு. பின்னர், இந்திரன் வருணன் என்ற இருவரையும் விமானங்களில் இடம் பெறுவித்து, திருக்காமக் கோட்டமுடைய தேவியையும் விநாயகரையும் திருமகளையும் பரிவாரமாக நிறுவினரென்பது, காமிகம், காரணம் என்ற ஆகமங்களால் உணரப் பெறுவதொன்று. இவ்வகையில் திருமால் கோயில் பண்டு தொட்டே சிவன் கோயில்களில் இருந்து வருதலின், தில்லைக் கோயிலில் இருந்த திருமாலுக்கு நந்திவன்ம பல்லவ மல்லன் காலத்தில் திருச்சித்திரகூடம் என்ற பெயரால் கோயிலெடுக்கப்பெற்றது. இதனைத் திரு. பிள்ளேயவர்கள் தக்க சான்று காட்டி நிறுவுவது போற்றத்தக்கது. இதனே, திரு. மு. இராகவையங்கார் அவர்களும் தாம் எழுதிய " ஆழ்வார்கள் காலநிலை" என்ற நூலில் முன்னமே ஆராய்ந்து காட்டியுள்ளார்கள். திருவாதவூரடிகளுடைய நூல்கள் இதுகாறும் கூறிப் போந்தவாற்றால் திருவாதவூரடிகள் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆட்சி புரிந்த முதல் வரகுணன் காலத்தில் வாழ்ந்து இரண்டு அரிய நூல்களைச் செய்தருளியுள்ளார்கள் என்பது இனிது விளங்கிற்று. அவை திருவாசகமும் திருக்கோவையாருமாகும். அவற்றுள், திருவாசகம் என்பது, அடிகள் ஆங்