பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நாட்டு வரலாறு

23

புராண இதிகாசங்களில் வல்லவனும், எல்லாம் வல்லவனும், எல்லாக் கிரியைகளிலும் சிறந்தவனும், நற்குண முடையவனும், அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைப் பிரகாசிக்கச் செய்யும் பானு போன்றவனும், துவிஜர்களுக்குத் தந்தை தந்தையும், வேதமறிந்து வேதநெறிப்படி நடந்து சந்தோக சூத்திரம் கூறியவாறே நடப்பவனும், வாஜபேய முதலிய யாகங்களைச் செய்தவனும், பாரத்துவாசியும், தண்டகநாட்டுப் பிராமண கிராமமான புண்ணியத்தில் வாழ்பவனும்......ஆகிய ஜேஷ்டபாதசோமயாஜிக் குக் கொடுகொல்லியான ஏகதிரமங்கலம் பிரமதேயமாகக் கொடுக்கப்படுகிறது.”[1]

வடமொழிப் புலமையும் வடமொழிவாணர்பாற் பெரு மதிப்பும் கொண்டிருந்ததனால், பல்லவ வேந்தர் கரணிசுதன் என்றும் வான்மீகியென்றும் செப்பேடுகளிலும் பிறவற்றிலும் பாராட்டப்பட்டனர். பல்லவ வேந்தரவையில் வடமொழிப் புலவர்கள் எஞ்ஞான்றும் சூழ்ந்து கொண்டிருப்பரெனத் தண்டந்தோட்ட்ச் செப்பேடுகள் குறிக்கின்றன.உதயேந்திரச்செப்பேட்டையெழுதிய பரமேஸ்வரனும், தண்டந்தோட்டச் செப்பேட்டையெழுதிய உத்தரகர்ணிகனும், காசாக்குடிச் செப்பேட்டை யெழுதிய திருவிக்கிரமனும் அக்காலத்தே சிறந்த வடமொழியறிஞராவர்.

இவ்வாறு வடமொழிப்புலவர்கட்குப் பொன்னும் பொருளும் நிலமும் ஊரும் தந்து சிறப்பித்த பல்லவ வேந்தர்கள், கல்லூரிகள் நிறுவி அவற்றின் வாயிலாக வடமொழியறிவு நாட்டில் பரவச் செய்தனர். இக்கல்லூரிகள் கடிகைகள் எனவும் வழங்கும். இக்கடிகைகளுள் காஞ்சிமா நகரிலிருந்த கடிகை மிக்க சிறப்பு வாய்ந்தது. காஞ்சிக் கடிகையின் பழமையினை யாராய்ந்தவர், அது கி.பி.நான்காம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறதென்பர். கடம்ப வேந்தனை மயூரசன்மன் என்பான் காஞ்சிக் கடிகையிற் சேர்ந்து கல்வி பயின்றவன்[2] என்பர். காசாக்குடிச் செப்பேடுகளும்


  1. 1. S. J. Ins. Vol. II. Part. ii p. 358. ff.
  2. 2. Indian Culture through the ages. p. 243. Note I.