பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

335

மாணிக்கவாசகர்

 சான்று. இத் திருக்கோவையர்ர்க்கு முன்னும் தமிழில் கோவை நூல்கள் இருந்தனவாயினும் அவை தமிழிலக்கிய வகையில் நிலைத்த இடம் பெறவிலலை இறையனார் களவியலுரையில் காட்டப்படும் பாண்டிக்கோவை, இத்திருக் கோவையார்க்கு முற்பட்டதொன்றே ஆயினும் அ.து இப்போது முழுவடிவில் காணப்படவில்லை. பாண்டியன் நெல்வேலி வென்ற நெடுமாறன் முதலிய பாண்டி வேந்தர் சிலரைப்பாட்டுடைத் தலைவராகக்கொண்ட கோவை நூல்களின் தொகையே பாண்டிக்கோவை எனவும், பாண்டியன் ஒருவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட ஒரு தனிநூல் இப் பாண்டிக் கோவையெனவும்1 [1] அறிஞர்கள் கருதுகின்றனர். தனி நூலாகவோ தொகைநூலாகவோ யாதாயினுமாகுக ; அது, திருக்கோவையாரைப் போல அன்றித் தன் முழுவடிவும் இல்லாமல் இருப்பது குறிக்கத் தக்கது. இன்றும், தமிழிலக்கிய வகைகளுள் ஒன்றான கோவைநூல் வகையில் உள்ளவற்றுள் வடிவு குன்றிச் சிதைவுறாமல் இருக்கும் திருக்கோவையாரே தொன்மை வாய்ந்து இலங்குகிறது. - தொல்காப்பியப் பொருளதிகாரத்துட் கூறப்படும் களவு, கற்பு என்னும் இருவகை ஒழுக்கத்தினும் நிகழும் நிகழ்ச்சிகளைப் பற்பல துறைகளாக வகுத்து, ஒவ்வொன் றையும் ஒவ்வொரு கட்டளைக் கலித்துறையில் வைத்துக் கோவைப்படப்பாடுவதுகோவை நூல். இந்நூல் வகையின் தோற்றம் இறையனார் களவியல் தோன்றிய பின்னர்த் தான் காணப்படுகிறது. இக்கோவைப் பாட்டுக்கள்,பாட்டுடைத்தலைவன், கிளவித்தலைவர்கள் என்ற இருதிறத்துத் தலைவர்களைச் சிறப்பிப்பன. கிளவித்தலைவராவார், களவு கற்பென்னும் இருவகைக்கைகோள்களையும் மேற்கொண்டு ஒழுகும் தலைவனும் தலைவியுமாவர். இம்முறையேபற்றி, இத் திருக்கோவையாரில், தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தப் பெருமான், பாட்டுடைத்தல்வகைத் திருவாதவூரடிகளாற்

1. திரு. மு, இராகவையங்கார், திரு. சதாசிவப் பண்டாரத் தார் முதலியோர்.


  1. திரு.மு.இராகவையங்கார் திரு.சதாசிவபண்டாரத்தார் முதலியோர்