பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



9. பட்டினத்துப் பிள்ளையார்

வரலாறு

திருவாதவூரடிகட்குப் பின்னர்க் காலத்தால் அடுத்து வருபவர் பட்டினத்தடிகள் எனப்படும் பட்டினத்துப் பிள்ளையாராவர். காவிரிப்பூம்பட்டினத்தில் சைவ வணிகர் குடியில் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் இடையில் வாழ்ந் தவர் நம் பட்டினத்தடிகள். இவருடைய தந்தைபெயர் சிவ நேசர் என்றும், தாய் பெயர் ஞானகலாம்பை என்றும் அடிகளின் இயற்பெயர் திருவெண்காடர் என்றும் அவரது வரலாறுரைக்கும் நூல்கள் கூறுகின்றன.

அடிகள், தக்க பருவமெய்தியபோது தம் இனத்துச்செல்வர் ஒருவருடைய மகளை மணந்து இல்வாழ்க்கை நடத்திவந்தார். அவர்க்கு மருதவாணன் என்று ஒரு மகன் பிறந்து பதினாறு ஆண்டு இருந்து பின் இறைவன் திருவடி அடைந்தான்.மருதவாணனுக்குப் பின் அடிகட்கு மகப் பேறே உண்டாகவில்லை. ஆயினும், அந்நாளில் வறுமையுற்று வருந்திய ஆதிசைவர் ஒருவருடைய ஆண்மகவு ஒன்றை அவர் விலக்கு வாங்கித் தன்மகனக வளர்த்து வந்தார். அச்சிறுவனுக்கும் மருதவாணன் எனவே பெயர் இட்டிருந்தார். இந்த மருதவாணன் நாளடைவில் வளர்ந்து கற்பன கற்று வணிகத்துறையில் வல்லுநனாய் விளங்கினான். -

அந்நாளிலும் காவிரிப்பூம்பட்டினம் கடல் வாணிகத்துக்குச் சிறந்த இடமாகவே விளங்கிற்று, காவிரிப்பூம்பட்டினத்து வணிகர் பலரும் கடல் வாணிகம்செய்து வந்தனர். அதனால் மருதவாணனும் கடல் வாணிகத்தில் ஈடுபட்டுப் பெருஞ் செல்வத்தை ஈட்டினான். அதனால் அடிகட்கு அவன்பால் அளவுகடந்த அன்புண்டாகியிருந்தது. ஒருநாள் அவன் அவர் மனயில் இல்லாத காலம் பார்த்து, காதற்ற ஊசி யொன்றும் ஒலை நறுக்கு ஒன்றும் அடங்கிய கைப் பெட்டி ஒன்றை அன்னையிடம் கொடுத்து வெளியே சென்

STV–24