பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டினத்துப் பிள்ளையார்

373



இறுதியில், அடிகள் திருவொற்றியூர்க்குச் சென்றார். அங்கே கடற்கரையில் ஆடையொலிக்கும் வண்ணாருடைய சிறுவர்கள் மணல்மேடுகளில் விளையாடக்கண்டு தாமும் அங்கே தங்கி அவர்கட்கு விளையாட்டுக்காட்டிவந்தார். அவ்வூர் இறைவன் பேரில் திருவொற்றியூர் ஒருபா வொருபஃது என்னும் நூலைப்பாடி வழிபட்டு வருவது அவர்க்கு வழக் கம். சின்னாள் கழிந்தபின், அச்சிறுவர்களோடு இனிய சொல்லாடித் தம்மை ஒரு மணற் குழியில் புதைக்கச் செய்து வேறொரிடத்தில் காட்சிதந்து இன்புறுத்தினர். இவ்வாறே, அவர்கள் தம்மை ஆழப்புதைக்கு மளவும் விளயாட்டுக்காட்டியிருந்து கடைசியில் அவர்கட்குக் காட்சி தாராராயினர். அச்சிறுவர் நெடுநேரம் நோக்கியிருந்து, பின்பு அவரைப் புதைத்தவிடத்தை அகழ்ந்து நோக்கினர். அங்கே ஒரு சிவலிங்கம் காணப்பட்டது. அதுவே அவரது சமாதியாகக் கொண்டு மக்கள் என்றும் வழிபடும் நிலைமை உளதாயிற்று.

வரலாற்று ஆராய்ச்சி

பட்டினத்தடிகள் வரலாற்றைப் பட்டினத்துப் பிள்ளையார் புராணம், புலவர் புராணம் என்ற இரண்டும் செய்யுள் வடிவில் கூறுகின்றன. திருவெண்காட்டடிகள் சரித்திரம் என்ற உரை நூல் ஒன்று தொழுவூர் வேலாயுத முதலியாரால் எழுதப்பட்டுளது ; அது வடநூல் பவிஷ்யோத்தர புராணத்துத் திருவிடைமருதூரர் மான்மியம் உரைத்த பகுதியில் உள்ளதென்று அவ்வுரைநூல் கூறுகிறது. இம்மூன்றனுள் பட்டினத்துப்பிள்ளையார் புராணத்தைப்பாடியவர் இன்னாரெனத் தெரியவில்லை. புலவர் புராணம் ஏனையிரண்டிற்கும் காலத்தாற் பிற்பட்டது. திருப்புகழ் பாடிய அருணகிரி நாதர் பட்டினத்தடிகட்கு மகனாவர் என்று கூறுவது தான் புலவர் புராணத்துட்காணப்படும் சிறப்பான கருத்து. அடிகட்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்துப் போந்த அருணகிரிநாதரை ஒரு காலத்து மகனாகக் கூறுவது உண்மைக்கு மாறுபட்டதாகலின், அஃது இவ்வரலாற்றில் குறிக்கப்படவில்லை. பவிஷ்