பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376

சைவ இலக்கிய வரலாறு

 பதினோராந் திருமுறையைத் தொகுத்தவராகக் கருதப்படும் நம்பியாண்டார் நம்பி கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர்.[1] அப்பதினோராந் திருமுறையில் பட்டினத்தடிகள் பாடிய நூல்களையும் தொகுத்திருத்தலால், அடிகள் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் வாழ்ந்தவரென்பது தெளிவாம்.

நூல்கள்

பட்டினத்தடிகள் இயற்றியன எனக் கோயில் நான்மணி மாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதுார் மும்மணிக்கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபாவொருபஃது என்ற ஐந்து நூல்களை மேலே கூறிய பதினோராந் திருமுறையிற் காணப்படுகின்றன. இனிப்பட்டினத்தார்.பிரபந்தத்திரட்டு என்ற நூலில் இவற்றின் வேறாகப் பல தனிப்பாட்டுக்களும், கோயிற்றிருவகவல், கச்சித் திருவகவல், திருவேகம்பமாலை, பொது வெண்பா, பின் முடுகுவெண்பா, விருத்தம், முதல்வன் முறையீடு, அருட்புலம்பல், இறந்த காலத்திரங்கல், நெஞ்சொடு புலம்பல், பூரணமாலை, நெஞ்சொடு மகிழ்தல், உடற்கூற்று வண்ணம் ஆகிய பலநூல்கள் காணப்படுகின்றன. இவை முன்னோர்களால் பட்டினத்தார் அருளியன அல்ல என ஒதுக்கப்பட்டன வாதலால் ஈண்டு மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இவற்றின் மொழி நடையும் கருத்தும் திருமுறையிற் கோக்கப் பட்டுள்ள நூல்களைப் போல விழுமிய முறையில் இல்லை. இவை, பிற்காலத்தார் ஒருவராலோ பலராலோ பாடிச் சேர்க்கப்பட்டன என்பது தமிழறிஞர் இடையே நிலவும் கருத்து.


நூலாராய்ச்சி

கோயில் நான்மணிமாலை முதலாகவுள்ள ஐந்து நூல்களை


  1. 1. Journal of the Annamalai University: Vol. XIV. р, 60.