பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டினத்துப் பிள்ளையார்

377



யும் ஆராயுங்கால், அடிகள் காலத்தில் பல புராண வரலாறுகள் நாட்டில் நிலவியிருந்தமை தெரிகிறது. திருமாலுக்கு இறைவன் ஆழி கொடுத்தது, குபேரனுக்கு நிதியளித்தது, கூற்றுவனைக் குமைத்தது, இறைவன் நஞ்சுண்டது, திரிபுரம் செற்றது, காமனைக் காய்ந்தது, தாருகவனத்து முனிவர் விடுத்த கரியை யுரித்தது, பார்த்தன் பொருட்டு வேடனானது, இராவணனை அடர்த்தது, சலந்தரனைத் தடிந்தது, சண்டேசுரர்க்கு அருள் செய்தது, சிறுத் தொண்டர் வரலாறு, கோச்செங்கணான் வரலாற்றுக் குறிப்பு, சாக்கிய நாயனார் வரலாற்றுக் குறிப்பு, திருஞானசம்பந்தர் பாலுண்டது, வரகுண தேவருடைய அன்புப்பணி முதலியன அவற்றுட் சிறப்புடையனவாகும்.

ஊர்கள்

அடிகள் துறவு பூண்டதும் முதற்கண் திருவிடைமருதுாரில் தங்கிச் செந்தமிழ்ப் பாட்டுக்களால் சிவபெருமானைப் பாடிப் பரவத் தொடங்கினார். அப்போது அவர் பாடியது திருவிடைமருதூர் மும்மணிக் கோவை. அதன் கண் திருவிடைமருதூரின் சிறப்பினைப் பல குறிப்புக் களால் எடுத்துரைக்கின்றார், பூவியல் வீதிகளும் கொடி நுடங்கும் மாளிகைகளும் திருவிடைமருதூரின் செல்வ நிலையை மிகுத்துக் காட்டுகின்றன.[1] நூலோற்பலம் பூத்த வாவிகள் காவிரியின் புடையே விளங்க, மருதவளம் மாண்புறுகிறது.[2] நந்தன வனங்களில் சந்தனம், சரளம்[3] சண்பகம், வகுளம் முதலியன நன்கு தழைத்து, வெயிலின் கதிர் நுழையாவாறு செழித்துள்ளன. அவற்றினிடையே அடியார்கள் பலர் காணப்படுகின்றனர்.[4] சீர்காழியில் கோபுரங்களும் மணிமேடைகளும் எந்திரவாவிகளும் நிறைந்துள்ளன. தண்ணிர்ப் பந்தர், அன்னசத்திரம்,




  1. திருவிடை. மும், 4.
  2. 2 ௸7.
  3. சரளம். விரிந்த நிழலைத்தரும் ஆலமரமும் அரசமரமுமாம்.
  4. திருவிடை. மும். 13.