பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



10. சேந்தனார்

வரலாறு

சேந்தனார் செப்புறை என்னும் ஊரிற் பிறந்து வாழ்ந்தவர். பட்டினத்தடிகள் துறவு மேற்கொள்ளுமுன் திருவெண்காடர் என்ற பெயருடன் கடல் வாணிகம் செய்த போது, அவர்பால் தலைமைக் கணக்கராய் இருந்தவர். திருவெண்காடர் துறவு பூண்டு, தம்முடைய செல்வத்தை ஏழை எளியவர்க்கு வழங்குக என்ற ஆணை கேட்டு அவ்வாறே செய்தமை கண்டு, அடிகளின் உறவினர் வேண்டுகோட்படியே அப்பகுதியை ஆண்ட வேந்தன் அவரைச் சிறையிட்டான். பின்பு, அடிகளது உண்மை நிலை விளங்கியதும் சேந்தனார் சிறைவீடு பெற்றுத் தில்லைப் பகுதியில் இருந்து வந்தார்.

தில்லையில் இருந்து வருகையில் மார்கழித் திருவாதிரை விழாக் காலத்தில் தேர்த் திருநாளன்று தேர்எளிதில் பெயராதாயிற்று. அப்போது அங்கிருந்த சேந்தனார் திருப்பல்லாண்டு பாடினர். தேர் இனிது பெயர்ந்து சென்றது. பின்பு, சேந்தனார் திருவாவடுதுறை, திருவிழிமிழலை, திரு விடைக்கழி முதலிய திருப்பதிகட்குச் சென்று இறைவனை வணங்கித் திருவிசைப்பாப் பாடிப் பரவிக் கொண்டு தில்லைக்கு வந்து சேர்ந்தார். தில்லையில் கூத்தப்பெருமானை வழிபட்டுக்கொண்டிருந்து அவன் திருவடி நீழல் எய்தினார்

வரலாற்றாராய்ச்சி

சேந்தனார் பிறந்து வளர்ந்து சிறந்தவூர் திருவிழிமிழலையாக இருக்கலாம் எனத் திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் கூறுகின்றார்கள்.[1] செப்புறை யென்பது சேந்தனாரது ஊரென்பதை அவர் தாமே, "செப்புறைச் சேந்தன்'2[2] என்பதனாற் பெறுதும்.


  1. 1. இலக்கிய வரலாறு, Part II. பக். 327.
  2. 2. திருவிடைக்கழித் திருவிசைப்பா. 11. திருப்பல்லாண்டு. 13.