பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அணிந்துரை

(திரு. T. M. நாராயணசாமி பிள்ளை அவர்கள், M.A.,B.L. M.L.C.
துணைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்)


தமிழ் நாட்டிற்கு அதன் இலக்கியம் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பழங்காலந்தொட்டே தமிழ்நாடு இந்தத் துறையில் மேன்மை யுற்றிருந்திருக்கிறது. அண்மையில் தமிழ் இலக்கியத்தையும் மற்ற இலக்கியங்களையும் கற்றுணர்ந்து தேசப்பற்றை ஒப்பற்ற முறையில் ஊட்டினவர் அமரகவி பாரதியாரவர்களாவர். அவர் ‘யாம் அறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை’ என்றும் இது “உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை” என்றும் ஆணையிட்டுப் பாடியிருக்கிறார்.


இதைப் போன்று மற்றத் தேசத்திய பெரும் புலவர்களும் சொல்லியிருக்கிறார்கள். இப்பொழுது செக்கோசுலோவேக்கிய (Czekoslavia) நாட்டிலிருந்து நமது கலைப்பண்புகளை நேரில் தெரிந்து கொள்ளுவதற்காகத் தென்னிந்தியாவிற்கு வந்திருக்கும் சுவெலபில் (Zvelebil) அவர்களும் தமிழ் நாட்டின் சிறந்த இலக்கியங்களாகிய திருக்குறள், சிலப்பதிகாரம் முதலியவைகள் உலகத்தின் இறவாத இலக்கியங்கள் என்றும், அவை உலக நாகரிகத்திற்குத் தமிழ் கொடுத்த வரிசை யென்றும் சொல்லியிருக்கிறார்.


தமிழ் நாட்டு இலக்கியங்களில் ஒரு தனிச் சிறப்புற்ற பகுதி சைவ வைணவத் திருப்பாடல்கள். அவை கடவுளைக் கண்ட பெரியார்களால் கடவுளின்பேரில் உள்ள பேரன்பின் மிகுதியினால் மனம்பொங்கி இயற்கையாக வெளிவந்தவை. இந்த நூல்கள் இலக்கியத்தில் ஒரு சிறப்புப் பெறுவதுடன் மக்களை நல்வழிப்படுத்திச் சிந்தைடைச் செம்மை செய்யும் திறனுடையவை. தென்னாடு பக்தியில் தனிச்சிறப்புற்றது. அந்தத் தனிச்சிறப்பு இந்த நூல்களால்தான் உண்டாயிருக்கிறது. இந்தச் சிறந்த பக்தி இலக்கியம் வடநாட்டிலும் பத்தி வெள்ளத்தைப் பரவச் செய்திருக்கிறது.


தமிழ்மொழி வாயிலாக நம் முன்னோர் போற்றி வளர்த்த பேரறிவு நிறைந்த இலக்கியத்தைப்பற்றியும் புலவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பற்றியும், அவர்கள் வாழ்ந்த காலம், அரசியல் நிலை, சமய நிலை, சமுதாய வாழ்வு, கலை வளர்ச்சி