பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

396

சைவ இலக்கிய வரலாறு



பாண்டியன் காவிரிக்கரைப்பகுதியில் தனது ஆட்சி நிலவ வாழ்ந்தானாக, அவன் நாட்டுத் திருத்தவத்துறையில்,[1]நந்திவன்மன் நிவந்தம் பல விட்டிருப்பது அவ்வூர்க் கல்வெட்டால் தெரிகிறது.

தெள்ளாறு எறிந்த நந்திவன்மன் சிறிது விளங்கியகாலத்து, வடபுல வேந்தனான இரட்ட வேந்தன் தன் மகள் சங்காதேவியை அவனுக்கு மணஞ்செய்துதந்தான்[2]. இச்சங்காதேவி, நாட்டுமக்கட்கு அன்பினால் அன்னைபோலவும் உருவில் திருமகள் போலவும் விளங்கினாள்"[3]

நந்தியினது ஆட்சி நலம்பற்றிக் கூறும் செப்பேடுகள், ' “மழைகண்டசோலைபோலவும், சூரியனைக்கண்டதாமரைக் குளம் போலவும், மாரியிறுதியில் வானத்தில் தோன்றும் முழுமதியம் கண்ட கடல் போலவும் நாட்டவர் இன்பம் பொங்கி வாழ்ந்தனர்[4]'” என்று கூறுகின்றன.

நந்திவன்மன் காலத்தில் மாமல்லபுரம், மயிலாப்பூர், காஞ்சிநகர் என்ற பேரூர்கள் சிறப்புற்று விளங்கின. இவனுடைய கல்வெட்டுக்கள் சித்தூர் மாவட்டத்திலுள்ள குடிமல்லத்தும், செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த களத்தூரிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்துத் திருவெள்ளறையிலும், புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள குன்னாண்டார் கோயிலிலும் பிறவிடங்களிலும் உள்ளன. வடார்க்காடு மாவட்டத்திலுள்ள பள்ளிகொண்டாவிலிருக்கும் சிவன் கோயிலுக்கு முகமண்டபத்தையும், தென்னார்க்காட்டைச் சேர்ந்த கிளியனூர்ப் பெருமாள்கோயிலையும் தெள்ளாறு எறிந்த நந்திவன்மன் கட்டியிருக்கிறான். இவனைக் கல்வெட்டுக்கள், கோநந்தி விக்கிரமவன்மன், நந்திபோத்தரசர், அவனி நாராயணன், குமாரமார்த்தாண்டன்[5]' என்பன முதலிய சிறப்புப் பெயர்களாற் குறிக்கின்றன.


  1. 1.Ep. Indica. Vol. XX. p. 52.
  2. 2.S. I. I. Vol. II. part v. No. 14.
  3. 3.Ep. Indi. Vol. XVIII. p. 13.
  4. 4.S. I. I. Vol. II. part v. No. 98.
  5. 5. S. I. I. Vol. XII. No. 59.