பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

400

சைவ இலக்கிய வரலாறு



கலம்பக வரலாற்றாராய்ச்சி

தெள்ளாறெறிந்த நந்திவன்மன் இக் கலம்பகத்தால் இறந்தான் என்ற இவ்வரலாறு, கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த படிக்காசுப் புலவரால் தொண்டை மண்டல சதகத்திலும், பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விளங்கிய மாதவச் சிவஞானயோகிகளால் சோமேசர் முதுமொழி வெண்பாவிலும்[1] கூறப்படுகிறது, ஆகவே, முந்நூறு ஆண்டுகட்கு முன்பே இவ்வரலாறு நாடறிய நிலவிய தொன்மையுடையதென்பது தெளிவு.

நந்திவன்மனுடைய வரலாற்றுக் குறிப்புக்களை நல்கும் செப்பேடுகளோ கல்வெட்டுக்களோ இச் செய்தியைக் குறிக்கவில்லை. நந்திவன்மன் தெள்ளாறு எறிந்த வரலாற்றை இக்கல்வெட்டுக்கள் குறிப்பதுபோலவே, பெருந் தேவனர் பாரதவெண்பா, 'வண்மையாற் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால், உண்மையால் பாராளுரிமையால்-திண்மையால், தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றானோடு, யார் வேந்தர் ஏற்பார் எதிர்[2] 2 என்றும், நந்திக் கலம்பகம், ' கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த கோமுற்றப் படைநந்தி குவலய மார்த்தாண்டன்[3]' 'செம்பொன் செய்மணிமாடத் தெள்ளாற்றில் நந்திபதம் சேரார் ஆனைக் கொம்பன்றோ நங்குடிலிற் குறுங்காலும் நெடுவளையும் குனிந்துபாரே[4] " என்றும் கூறுகின்றன.

தெள்ளாறெறிந்த நந்திவன்மன் தமிழ்ப்பாட்டின் சுவையறிந்து மகிழும் தமிழ் மாண்புலமையும் அதனால் தமிழ்ப் பாவலர்க்குப் பெருங் கொடைபுரியும் வள்ளன்மையும் உடையன் என்பது, இக்கலம்பகத்தின் தோற்றத்தால்

.


.


  1. 1. சோ. முது. வெண்பா. 38. நந்திக்கலம்பகத்தால் மாண்டகதை நாடறியும், சுந்தரஞ்சேர் தென்குளத்தூர் சோமேசா' எனவரும்
  2. 2. பார. வெண்பா, 4.
  3. 3.நந்திக். 29.
  4. 4. ௸ 77.