பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

418

சைவ இலக்கிய வரலாறு



திருக்கோவலூரில் இருந்து ஆட்சி புரிந்த வேந்தர் மலயமான், மலயன், மலாடர் என்று வழங்கப் பெறுவர். இடைக் காலத்தே இம்மலையமான்கள் மிக்க சிறப்புடன் வாழ்ந்த செய்தியைத் திருக்கோவலூர்ப் பகுதியிற் காணப்படும் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. இம் மலையமான் களுள் தெய்வீகன் என்பானுக்குத் திருமணம் நடந்த போது திருமணத்துக்கு நெய்யும் பாலும் வேண்டுமென, ஒளவையார் பெண்ணையாற்றை நோக்கி,

“முத்தெறியும் பெண்ணை முது நீர் அது தவிர்ந்து

தத்திவரு நெய்பால் தலைப்பெய்து-குத்திச்

செருமலை தெய்வீகன் திருக்கோவலூர்க்கு

வருமளவில் கொண்டோடி வா”

[1]

என்றாராக, அவ்வாறே நிகழ்ந்தது என்பர். இதனைப் பாரதம் பாடிய வில்லிபுத்துTரர் மகனை வரந்தருவார் என்பார், “ஒளவை பாடலுக்கு நறுநெய் பால் பெருகி அருந் தமிழறிவினால் சிறந்து, தெய்வமா நதிநீர் பரக்குநாடு அந்தத் திருமுனைப்பாடி நன்னாடு”[2] என்று பாடியுள்ளார். இவ்வாறு, பல்வேறிடங்களிற் பலவேறுபாட்டுக்களைப் பாடினார் என்ற வரலாறு பலதோன்ற வாழ்ந்த ஒளவையார் முடிவில் என்னாயினர் என்பது விளங்கவில்லை. -

ஒளவையார் பாடிய நூல்கள்

ஒளவையார் அருளியன என ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை என்னும் வாக்குண்டாம், நல்வழி, ஞானக்குறள், விநாயகரகவல், பந்தனந்தாதி, அசதிக் கோவை, வைத்திய நிகண்டு, கல்வி ஒழுக்கம், நன்னூற் கோவை, நான்மணிக்கோவை, நான்மணிமாலை, அருந் தமிழ்மாலை, தரிசனப்பத்து என்ற நூல்கள் கூறப்படுகின்றன. இவற்றுள் முதற்கண் கூறிய ஏழும் ஒழிய எஞ்சியவை கிடைத்தில. கல்வி ஒழுக்கம் என்ற நூலைப்பற்றிக் கூறவந்த செந்தமிழ் ஆசிரியர், ' கல்வி ஒழுக்கம் என்பது


  1. 1. த.நா சரி. மேற். 55.
  2. 2. வில்லி பாரதம. சிறப்புப். 8.