பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாண்டார் நம்பி

435

திருவருளை வியந்து கோயிற் றிருப்பண்ணியர் விருத்தம் என்றொரு நூலைப்பாடிப் பரவினார். திருவெருக்கத்தம் புலியூர் இறைவனைப் பரவி நம்பியாண்டார் நம்பி பாடியன கிடைக்கவில்லை. திருநாவுக்கரசு சுவாமிகளைத் திருவேகாதசமாலைப் பாடிப் பரவியிருக்கின்றார்.

வரலாற்றாராய்ச்சி

நம்பியாண்டார் நம்பிகளின் பெற்றோர் பெயர் திருமுறை கண்ட புராணத்திற் காணப்படவில்லை. ஆனால், அவர் பிறந்த திருநாரையூரைக் குறித்தெழுந்த தல புராணம், நம்பியாண்டார் நம்பி, சந்திரசேகரன் என்னும் ஒரு நம்பி எனப்படும் ஆதி சைவர் வழிவந்த அனந்தேசன் என்பவர்க்கு அவர் மனைவி கலியாணி என்பாள் வயிற்றிற் பிறந்த புதல்வர் என்று இசைக்கின்றது.

நம்பியாண்டார் நம்பி பொல்லாப் பிள்ளையாரது திருவருட்கு உரியரான செய்தி பற்றிக் கூறவந்த தலபுராணம், நம்பிகள் மிக்க இளையராய் இருக்கும் போதே விநாயகர் பூசை செய்து பயின்று வந்தனரெனவும், அப்போதே விநாயகர் அப்பூசனையை விரும்பியேற்று அருள் புரிந்தனர் எனவும், ஒருகால் அவர் தனது தாயுடன் தன் பாட்டனார் ஊர்க்குச் சென்றிருந்த காலையில் பொல்லாப் பிள்ளையார் நம்பிகளின் வேண்டுகோட்கு அருள்புரிந்தாரெனவும், இவ் வகையால் நம்பியாண்டார்க்குப் பொல்லாப் பிள்ளையார் பால் பேரன்பு உண்டானதற்குக் காரணம், ஒரு நம்பி என்னும் அவரது முன்னோர் விநாயகர் வழிபாட்டில் பேரீடுபாடு கொண்டிருந்தமை எனவும் கூறுகிறது.

நம்பியாண்டார் நம்பிகளின் பெருமையைக் கேள்வி யுற்று அவரைக் காணப்போந்த சோழ வேந்தன் பெயர் “இராசராச மன்னவன்”[1] என்று திருமுறை கண்ட புராணம் குறிக்கிறது; அதுவே, அவ் வேந்தனைப் பிறிதோரிடத்தில் “குலசேகரனாம் கோன்”[2] என்று கூறுகிறது.


  1. திருமுறை. 6.
  2. ௸ 13.