பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. திருஞானசம்பந்தர்

பிறப்பு வரலாறு

திருஞானசம்பந்தர் சீகாழியில் அந்தணர் குலத்திற் பிறந்தவர். இவருடைய தந்தையார் சிவபாத விருதயரென்றும், தாயார் பகவதியாரென்றும் பெயர் கூறப் படுவர். இவர் கவுணிய கோத்திரத்தைச் சேர்ந்தவர். திருஞானசம்பந்தருடைய பெற்றோர் சிவன்பால் மிக்க அன்புடையவர். புத்த சமண சமயவுணர்வு பெரிதும் பரவியிருந்தமையின், அக்காலத்தே சைவமாகிய சிவநெறி ஒளி மழுங்கியிருந்தமை சிவபாத விருதயருக்குப் பெருவருத்தம் விளைத்தது. அவர் நாடோறும் சீகாழியிலுள்ள சிவபெருமான்பால் சிவநெறியின் வீழ்ச்சியினையும் செந்தமிழின் தளர்ச்சியினையும் எடுத்தோதி, இவற்றை முன்போல் சீரிய நிலையில் நிறுத்தவல்ல நன்மகனை உலகில் தோற்றுவிக்க வேண்டுமென இறைஞ்சி வந்தார்.

சிவபாத இருதயருடைய சிறந்த வழிபாடு விரைவில் அவர் கருத்து நிறைவுறச் செய்தது. அவர் மனைவியார் சின்னாட்களில் கருவுற்றுத் திருஞானசம்பந்தரைப் பயந்தார். ஞானசம்பந்தர் பிறந்து வளரும்போதே சிவன்டால் பேரன்புண்டாகத்தக்க சூழ்நிலையை அவர் தாயார் உண்டு பண்ணினார். அவர் ஞானசம்பந்தக் குழந்தைக்குத் தன் பாலைத் தரும்போதெல்லாம் சிவன்பால் மிக்க அன்பு செலுத்துவார். அந்த அன்பு, அவர் பாலில் ஊறி ஞான சம்பந்தர் உடலும் உயிரும் சிவன் பாலுண்டான அன்பு வடிவாய் வளரச் செய்தது.

இவ்வண்ணம் ஆண்டுகள் மூன்று கழிந்தன. ஞான சம்பந்தர் தந்தையால் பிரியாத அன்புகொண்டார். தந்தையாரும் அவர் அழுகை காணத் தரியாதவரானார். ஒருநாள் சிவபாத விருதயர் சீகாழிக் கோயிலில் உள்ள திருக்குளத்துக்கு நீராடச் சென்றார். திருஞானசம்பந்தர் அது கண்டு தாமும் உடன் வர விரும்பும் விருப்பத்தைத் தெரிவித்தார்.