பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

440

சைவ இலக்கிய வரலாறு

லோக மெய்தினான் என்று கூறுவதற்குச் சிறிதும் இடமில்லை. இந்நிலையில், சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்ததாக ந ம் பியா ன் டா ர் நம்பி தம் திருத்தொண்டர் திருவந்தாதியிற் கு றி ப் பி ட் டு ள் ள ஆதித்தன் என்பான், விசயாலய சோழன் புதல்வனும் முதற் பராந்தக சோழன் தந்தையும் கி. பி. 870-முதல் 907-வரையில் சோழ மண்டலத்தை ஆட்சி புரிந்த பெருவேந்தனுமாகிய முதல் ஆதித்த சோழனே யாவன். இவன் பல்லவ அரசனாகிய அபராசித வர்மனைப் போரில் வென்று தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றிய காரணம்பற்றித் 'தொண்டை நாடு பரவின சோழன் பல்யானைக் கோக்கண்டராயின ராசகேசரி வர்மன்'1 என்று வழங்கப் பெற்றுள்ளனன். இவன் ஆட்சியிலே தான் சோழராச்சியம் உயர்நிலையை எய்தியது. இவன் கொங்கு நாட்டைக் கைப்பற்றித் தலைக்காடு என்ற நகரையும் பிடித்துக்கொண்டான் என்று 'கொங்கு தேச ராஜாக்கள்' என்னும் வரலாற்று நூல் கூறுகின்றது.2 ஆகவே, கொங்கு நாட்டைக் கைப்பற்றிய இம் மன்னர்பிரான் அந் நாட்டிலிருந்து பொன் கொணர்ந்து தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். இவன் காவிரியாற்றின் இருமருங்கும் பல சிவாலயங்களைக் கற்றளிகளாக அமைத்த சிவபக்தன் என்று அன்பிற் செப்பேடுகள்3 கூறுவது ஈண்டு அறியத்தத்கது.

இனி, இவ்வாதித்தன் புதல்வன் முதற் பராந்தக சோழன் என்பான் தில்லைச் சிற்றப்பலத்தைப் பொன் வேய்ந்தான் என்று ஆனைமங்கலச் செப்பேடுகளும்4 திருவாலங்காட்டுச் செப்பேடுகளும்5 உணர்த்துகின்றன. கொங்கு தேச ராஜாக்கள் சரிதமும் இச் செய்தியை உறுதிப்படுத்துகின்றது. எனவே, முதற் பராந்தக சோழனது ஆட்சிக் காலத்திலும்


1.South Indiam Inscriptions, Vol. III. No. 89.

2.செந்தமிழ். தொகுதி 16. பக். 394

3.Ep. Ind. Vol. XV. No. 5. verse. 18.

4.Ibid. Vol. XXIII. No. 34. verse. 17.

5.S. I. I. Vol. III. No. 205. verse. 53.