பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாண்டார் நம்பி

441

தில்லைச் சிற்றம்பலம் மீண்டும் பொன் வேயப்பட்டது என்று கொள்வதே பொருத்தமுடையதாகும். அங்ஙனமே, முதற் குலோத்துங்க சோழனது ஆட்சியின் 44-ஆம் ஆண்டாகிய கி. பி. 1114-ல் அவன் தங்கை குந்தவை யென்பாள் தில்லைக் கோயிலைப் பொன் வேய்ந்தனள் என்று அக் கோயிற் கல்வெட்டொன்று1 அறிவிக்கின்றது. அவன் மகன் விக்கிரம சோழன் என்பான் கி. பி. 1128-ல் சிற்றம்பலத்தைச் சூழ்ந்த திருச்சுற்று மாளிகையையும் திருக்கோபுரத்தையும் பொன் வேய்ந்தான் என்று அவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது.2 அவன் படைத் தலைவனாகிய மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பவன் தில்லையிற் பொன்னம்பலத்தைப் பொன் வேய்ந்தான் என்று அங்குள்ள கல்வெட்டுக்களுள் ஒன்று தெரிவிக்கின்றது. 3 விக்கிரம சோழன் மகனாகிய இரண்டாங் குலோத்துங்க சோழன் தில்லைச் சிற்றம்பலத்தையும் பிறவற்றையும் பொன் வேய்ந்தான் என்று இராசராச சோழனுலா 4 உணர்த்துகின்றது.

இவற்றை யெல்லாம் கூர்ந்து நோக்குமிடத்து, சோழ மன்னர் ஆட்சிக் காலங்களில் தில்லைச் சிற்றம்பலம் பன் முறை பொன்வேயப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகும். ஆனால், அதனை முதலில் பொன் வேய்ந்த சோழ மன்னன் விசயாலயன் புதல்வனாகிய முதல் ஆதித்தனேயாவன் என்பது நம்பியாண்டார் நம்பியின் திருவாக்கினல் வெளியாகின்றது. இப் பெரியார், தம் காலத்தில் இவ்வேந்தன் அவ்வரும் பணியாற்றிய காரணம்பற்றி அச் செயலைத் தம் திருத்தொண்டர் திருவந்தாதியிற் பாராட்டியுள்ளனர் என்பது தெள்ளிது. இவர் சிதம்பரத்திற்கு அண்மையிலுள்ள திருநாரையூரிலிருந்தவ ராதலின் இவ்வரசன் தில்லையிற் புரிந்த அத் திருத்தொண்டில் தாம் நேரிற் கலந்து கொண்டு அதனை அறிந்திருத்தலும் இயல்பேயாம்.


1. Ep. Ind. Vol. No. 13-(c).

2. S. I. I. Vol. v. 458.

3. S. I. I. Vo]. IV. No. 225.

4. வரிகள், 59-66,