பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

456

சைவ இலக்கிய வரலாறு

வேண்டிக் கொண்டதாகக் காணப்படும் செய்தி, இந்த அந்தாதியில் “மெல்லிய (செந்) த (மிழ்) மாலைக்கு மெய்ப்பொருள் வேண்டுமெனச், சொல்லிய கோவிற்கு அருள்செய்தவன்”[1] என்று குறிக்கப்படுகிறது. இந்நிலையில் “நுரைவெண் கடலுட் போய் இலங்காபுரம் செற்ற பொற்றேரவன் போந்திருந்து, வாயிலங்கு ஆர்தரு மந்திரத்தால் வணங்கிப் பணிந்த சேயிலங்கு ஆர்கழல் தீர்த்தன் சிராமலை”[2] என்பதில் அடங்கிக் கிடக்கும் வரலாறு. நன்கு தெரிந்திலது. “இலங்காபுரம் செற்ற பொற்றேரவன்” என்றது, அயோத்தியர் இறையாகிய இராமனைக் குறிக்கலாம் எனச் சில அறிஞர் உரைப்பது பொருத்தமாகத் தோன்றவில்லை.

இறைவன் அருள்நலம்

நிலம் நீர் தீ வளி விசும்பு உயிர் ஞாயிறு திங்கள் என்ற எட்டும் வடிவமாகக் கொண்டவன் சிராமலை இறைவன்;[3] ஆக்கலும் அழித்தலும் செய்பவன் அவனே;[4] பற்றறுத்து உடம்பினைக் கழித்து ஞானக்கண் கொண்டு காண்பார் காணத்தக்கவன்;[5] அவ்வாறு கண்டு வழிபடும் அடியரை இவ்வுலகாளும் முடிவேந்தராகச் செய்வன்;[6] அவன் தன்பால் அன்புகொண்டு ஒழுகுவார்க்கு இறுதிநாளில் கூற்றுவன் வரும்போது அஞ்சல் வேண்டா என அருள்புரிவன்.[7]

இப்பெற்றியனாகிய இறைவனது சிறப்புணரும் அடியார்கள் செய்யத் தகுவன இவையென அறிவுறுத்துவாராய், “பணிமின்கள் பாதம் பகர்மின்கள் நாமங்கள் பாரகத்தீர் தணிமின்கள் சீற்றம் தவிர்மின்கள் பொய்ம்மை தவம்புகுநாள், கணிமின்கள்”[8] எனவும் “மொழிந்திடும் மெய்ம்மை முனிந்திடும் பொய்ம்மை முயன்றிடுமின், கழிந்திடும் யாக்கையைக் கைப்பிணி கோடல்...... சிராமலை புகுந்திடுமின் இழிந்திடுமின் நும்வினை ஈசன் அங்கே வந்து எதிர்ப்படுமே”[9] எனவும் உரைக்கின்றார். கற்றறிந்த புலவர்களை


  1. 1. சிரா.ய. 15.
  2. 2. சிரா.ய. 91.
  3. 3. சிரா.ய. 58.
  4. 4. ௸ 53.
  5. 5. ௸ 49.
  6. 6. ௸ 59.
  7. 7. ௸ 4.
  8. 8. ௸ 40.
  9. 9. ௸ 3.