பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருஞானசம்பந்தர்

37

குப் பொற்றாளம் வந்தது. அவர் காலால் நடந்து செல்வது காணப்பெறாத தந்தையாராகிய சிவபாத இருதயர் அவரைத் தம் தோள்மேற் சுமந்து செல்லலுற்றார்.

ஞானசம்பந்தருடைய தாய்ப்பாட்டனார் ஊர் திருநனி பள்ளியென்பதாகும். சிவபாத இருதயர் ஞானசம்பந்தரை அவ்வூர்க்கு எடுத்துச் சென்றார். அங்கேயுள்ள இறைவனை ஞானசம்பந்தர் இனிமையாகப் பாடினார். அது கண்ட உறவினரும் பிறரும் கொண்ட இன்பத்துக்கு அளவில்லை. ஆங்கிருந்து பல மக்கள் வந்து அவரைக் கண்டு வணங்கித் தத்தம் ஊருக்கு வரவேண்டுமென வேண்டினர். அவர்கள் வேண்டுகோட்கிணங்கிய ஞானசம்பந்தர், அருகிலுள்ள பலவூர்கட்கும் சென்று இறைவனைத் திருப்பதியம் பாடிப் பரவி வந்தார்.

திருஞானசம்பந்தர் சீகாழிக்கு வந்து சேர்ந்ததும், அவரைக் காண்பதற்குத் திருநீலகண்ட யாழ்ப்பாணரென்பாரும் அவர் மனைவியான மதங்கசூளாமணியென்பாரும்[1] வந்தனர். அவர்களை ஞானசம்பந்தர் அன்புடன் வர வேற்று, சீகாழி இறைவன் திருமுன் திருப்பதியம் பாடினர். அதனை யாழ்ப்பாணர் தமது யாழிலிட்டு இசைத்தார். பாட்டும் இசையும், பருந்தும் நிழலும்போல் இயைந்து, கேட்போர் செவியகம் புகுந்து, நெஞ்சு முழுதும் சிவபோகம் நிரம்பச் செய்தன. பின்பு, பாணனார், தாம் எப்போதும் உடனிருந்து பிள்ளையார் பாடும் திருப்பதியங்களை யாழிலிட்டு இசைக்கும் பேற்றினைப் பெற விரும்புவதாகத் தெரிவித்தார். ஞானசம்பந்தரும் அதற்கு இசைந்தார். அது முதல் பாணனாரும் பிள்ளையாருடன் செல்லுமிடந்தோறும் உடன் செல்வாராயினர்.

இவ்வாறிருக்கையில் ஞானசம்பந்தர் தில்லைக்குச்


  1. திருக்கொள்ளம்பூதூர்க் கோயிற் கல்வெட்டொன்றால் இந் நீலகண்டப்பாணனார் திருவுருவத்தையும் இவர் மனைவியார் திருவுருவத்தையும் கோயிலில் எழுந்தருளுவித்து நாளும் வழிபாடு செய்யப்பெற்றமை (A. R. No. 254 of 1917), தெரிகிறது. இவர் மனைவியார் “(சிவ)சூடாமணி” யென இக்கல்வெட்டிற் குறிக்கப்படுகின்றார்.