பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

460

சைவ இலக்கிய வரலாறு

லாவாறு கீழே இருத்தும் கனவிய பொருளை அதனோடு கட்டிவிடுவதுபோல, வீடுபேறு நோக்கி இறைவன் அருள் வெளி காணும் மக்களுள்ளத்தை அகத்துறைக் கருத்துக்கள் போந்து கீழ்நிலையில் படரச்செய்கின்றன; சில கருத்துக்கள் “இவையிற்றை முற்றத் துறந்த முனிவரரோ பாடினர்?” என அயிர்க்கும் அளவில் அமைந்துள்ளன.

ஞானசம்பந்தர் முதலிய சான்றோர்கள் பாடிய திருப்பதிகங்களில் அகத்துறைப் பாட்டுக்கள் உள்ளன; அவை பெண்ணுள்ளம் இறைவனது அருட்கூட்டம் விழைந்து நினைந்தும் சொல்லியும் செய்வனசெய்தும் ஒழுகும் இயல்பில் அமைந்தனவே யன்றி ஆண்மை பெண்மையை வேட்டொழுகும் நெறியின அல்ல. சங்ககாலத்துக்குப் பின்னுண்டான மாறுதல்களால் உலகியல் நல்வாழ்வுக்கமைந்த அகவொழுக்கம் வெறுங்கற்பனையாக மாறிற்று; பிற்காலத்தே தோன்றிய அகப்பொருள் இலக்கணங்களும் அம்மாற்றத்துக்குத் துணைபுரிந்தன. இன்று அவை வாழ்வில் நிகழக்கூடாத கற்பனை கலந்த நாடகவழக்காகக் கருதப்படும் நிலையை எய்திவிட்டன; சாதி வேற்றுமைகளைப் புகுத்தி மக்கட் சமுதாயத்தின் ஒருமைப்பாட்டைச் சீரழிக்கக் கருதியோரது பொல்லாச் சூழ்ச்சி இம்மாறுதலால் அசைக்க முடியாத வெற்றிபெற்று விட்டது. சமயவுணர்வு ஒழுக்கங்கட்கு அடிப்படையான “ஒன்றேகுலம்; கடவுள் ஒருவரே” என்ற கொள்கையை உடைத்தெறியும் வகையில் சிறு தெய்வங்களைப் புகுத்தி மண்ணுலக மக்களைப்போல் ஒக்கல் வாழ்க்கை அவைகட்கும் ஏற்றியுரைக்கும் கற்பனைக்கதைகள் வகுக்கப்பட்டன. கடவுள் ஒருவரே என்ற கருத்து எங்கும் நிலைபெறுமாறு சிவன் கோயில்கள் எல்லாவற்றிலும் “இன்னவுரு” என்று அறியலாகாத சிவவடிவம் ஒன்றே அமைத்த பெருமக்கள் திருக்குறிப்பை முளையிலே கிள்ளியெறிவதுபோல மிகப்பல வடிவங்களும் அவற்றிற்கிடையே அகப்பொருள் ஒழுக்க வரலாறுகளும் படைக்கப்பட்டன. சிவன் கோயில்களில் திருமுறை ஆசிரியர்களான நால்வர் காலத்தில் அம்பிகைக்குக்கூடக் கோயில்கள் இல்லை யென்பதும்,