பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்பையர்கோன் நாராயணன்

467

பின்பற்றித் தலைவனைக் கூடிய தலைவியை, “இரும்பிடைச் சேர்ந்த தெண்ணீரவள்”[1] என்று கூறுகின்றார். அகம் சிவந்து புறம் வெண்டுகள் பரந்த பொருளை நீறு பூத்த நெருப்பென்பது வழக்கு; அகவிதழ் சிவந்து புறவிதழ் வெளுத்திருக்கும் குரவமலர்க்கு இதனை உவமமாக்கி “அழலின் புறத்து வெண்ணீறு ஒத்தன நம் அணிவளை யார் குழலும் அளகமும் பெய்யக் கொய்யாத குரா மலரே”[2] என்றும் குறிக்கின்றார். எல்லென்னும் இடைச்சொல் இலங்குதல் என்னும் பொருள் தருவது; “எல்லே இலக்கம்”[3] என்பது தொல்காப்பியம்; இது பெரும்பாலும் “எல்வளை” எனப் பெயர்களைச் சிறப்பித்து நிற்குமேயன்றி வினையாதல் இல்லை; “எல்லின்று” என வினையாங்கால் விளக்கம் குன்றிற்று என்ற பொருள்பட வரும்; “ஏகுதி மடத்தை எல்லின்று பொழுதே”[4] எனச் சான்றோர் வழங்குவது காண்க. நம் நாராயணனார், அதனை எல்லும் என வினைப்படுத்து விளங்கும் என்ற பொருள்பட “எல்லும் கனைகழலின் குணம் பாரித்த என்கவியே”[5] என வழங்குகின்றார்.

அங்கு இங்கு என்ற சொற்கள் அங்குத்தை இங்குத்தை என மருவிநிற்கும் வழக்கொன்று பிற்காலத்தே தோன்றிற்று. “குயிலே இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்”[6] என்பது காண்க. அதனைப் படர்க்கைக்கண் அங்குத்தார் என்றும் தன்மைக்கண் இங்குத்தேன் என்றும் நிறுத்தி, “யானும் பசலையென்னும் துனிப்படம் போர்த்து இங்குத்தேன் அங்குத்தான் அன்பர்”[7] என நம் வேம்பையர்கோன் உரைக்கின்றார்.

மகளிர் மூக்குக்குக் குமிழ்மலரை யுவமம் கூறுவது பண்டை நூல் வழக்கு; எட்பூவைக் கூறுவது மிகமிக அருகி வருவதொன்று. அதனை எடுத்து,


  1. 1. சி.ய. 84.
  2. 2. சி. ய. 98.
  3. 3. தொல். இடை . 21.
  4. 4. நற். 264.
  5. 5. சி.ய. 81.
  6. 6. நாச்சி.திருமொழி.5:10.
  7. 7. ௸ 31.