பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருஞானசம்பந்தர்

41

திருக்கோயில் மறைக்கதவங்கள் திறக்கவும் மூடவும் பாடிச்சிறப்பித்து, மக்கள் சிவநெறியின் செம்மையுணர்ந்து இன்புறச் செய்தனர். அங்கிருந்தே திருவாய்மூருக்குச் சென்று, இருவரும் இறைவனை வழிபட்டுச் சின்னாள் தங்கினர். பின்னர் இருவரும் திருமறைக்காட்டுக்குத் திரும்பிப் போந்து செந்தமிழ் இசைப்பணியால் சிறப்புமிக்கிருந்தனர்.

இந்நாளில் மதுரையில் இருந்து ஆட்சி புரிந்த பாண்டியன் நெடுமாறன் என்பவனாவான். அவனைக் கூன்பாண்டியன் என்றும் சுந்தரபாண்டியன் என்றும் கூறுவது வழக்கம். அவன் மனைவி பெயர் மானியார் என்பது. அவரை மங்கையர்க்கரசி யென்பது பெருவழக்கு. அக்காலத்தே அவன் சமண சமயத்தை மேற்கொண்டிருந்தான். பாண்டி நாட்டில் சமண சமயமே சிறந்து விளங்கிற்று. வேந்தன் மனைவியாராகிய மங்கையர்க்கரசியார். திருஞானசம்பந்தரைப் பாண்டி நாட்டுக்கு வருதல் வேண்டுமெனத் திருமறைக்காட்டிற்குத் தூதரை விடுத்தனர். அது கண்டு ஞானசம்பந்தர், மதுரை. நோக்கிச் செல்வார், நாவரசர்பால் விடைபெற்றுச் சென்றார். நாவரசர் சோழ நாட்டிலே தங்கினர். மதுரைக்குச் சென்ற ஞானசம்பந்தர் சமணர் இட்ட தீயினின்றும் உய்ந்து வேந்தனுக்கு உண்டான வெப்பு நோயைப் போக்கி, அனல்வாதம், புனல்வாத முதலியவற்றால் சமணரை வென்று பாண்டி வேந்தனைச் சைவனாக்கிச் சிறப்பெய்தினார்.

ஞானசம்பந்தர் மதுரையிற் சிலநாள் தங்கி ஆலவாய் இறைவனைப் பாடிப் பணிந்துவந்தார். அவர் சமணரை வென்ற செய்தி தமிழகம் எங்கும் பரவிற்று. சீகாழியிலிருந்த சிவபாத இருதயரும், மதுரைக்கு வந்து பிள்ளையாரைப் பார்த்து மிக்க இன்பமுற்றார். பின்பு அங்கிருந்து பாண்டியனும் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் உடன்வரத் திருப்பரங்குன்றம் திருவாப்பனூர் முதலாகப் பாண்டிநாட்டுப்பதிகள் பலவற்றிற்கும் சென்று, இறைவனைப் பாடிப் பரவிக் கொண்டு இராமேச்சுரமடைந்து இராமநாதரைப் பாராட்டிப் பாடி, அங்கிருந்துகொண்டே