பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருஞானசம்பந்தர்

43

வனை இனிய தமிழ்ப் பாட்டால் வழிபட்டு வாழ்த்தினார். பின்பு இருவரும் தத்தம் இறைவழிபாட்டு நலங்களையும் இடையே நிகழ்ந்தவற்றையும் தம்முள் அளவளாவிக் கொண்டனர். முடிவில் நாவரசர் பிள்ளையாரிடம் விடைபெற்றுக் கொண்டு பாண்டி நாட்டுக்குச் செல்லலுற்றார்.

ஞானசம்பந்தர், தமது தந்தையாருடன் திருநெய்த்தானம் முதலிய பதிகளை வணங்கிக்கொண்டு சீகாழிக்கு வந்து சேர்ந்து சில காலம் தங்கியிருந்தார். தங்கியிருக்கையில் அவருக்குத் தொண்டைநாட்டிலுள்ள திருக்கோயில்கட்குச் சென்று வழிபட வேண்டுமெனும் வேட்கையெழுவதாயிற்று. முடிவில் தந்தையிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்படுகையில் அவரும் உடன்வரவிழைந்தார்; ஆயினும் அவரைச் சீகாழியில் இருக்கச்செய்து, தில்லை, திருத்தினை நகர், திருமாணிகுழி முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டே திருவண்ணாமலை வழியாகத் திருவோத்தூருக்குச்சென்று சேர்ந்தார்.

திருவோத்தூரில், ஓரன்பர், திருக்கோயில் ஆற்றங்கரையில் இருத்தலின் அதற்கு அடைகரையாகப் பனைமரங்களை வைத்து வளர்த்து வந்தார். அவை யாவும் ஆண் பனைகளாய்க் காயாதொழியவே, அவ்வூர்க்கருகில் வாழ்ந்த சமணர்களுட் சிலர் அவரை எள்ளி நகையாடினர். அக் காலை ஞானசம்பந்தர் அங்கே எழுந்தருளவும் அவ்வன்பர் உண்மையைப் பிள்ளையாரிடம் அறிவித்துக்கொண்டார். பிள்ளையார் திருவோத்தூர் இறைவனைப் பாடிப் பரவிய திருப்பதியத்தில் இக்குறிப்பினை வைத்துப் பாடியருளினர். அதன்பின் பனைகள் பூத்துக் காய்க்கத் தொடங்கின.

திருவோத்தூரிற் சில நாள் தங்கியிருந்த பிள்ளையார், பின்பு திருமாகறல் திருக்குரங்கணில்முட்டம் முதலிய திருப்பதிகளை வணங்கி வழிபட்டுக்கொண்டே, திருவாலங்காடு சென்று, காரைக்காலம்மை பரவிய ஆலங்காட்டிறைவனைப் பதியம் பல பாடிப் பரவினர். அதன்பின் திருவெண்பாக்கம் திருக்காரிகரை முதலிய திருப்பதிகளைப் பரவிக் கொண்டு சென்று திருக்காளத்தியைக் குறுகினார். அவர் வரவு கேள்வியுற்ற திருக்காளத்தி யன்பர்கள்