பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருஞானசம்பந்தர்

40

தனர். குடமும் அவர் திருமுன்னர் வைக்கப்பட்டது. ஞானசம்பந்தர் ஆண்டவன் திருவருளை நினைந்து “மட்டிட்ட புன்னை” யெனத் தொடங்கும் திருப்பதியத்தைப் பாடி இறைவனை இறைஞ்சினார். எற்புக் குடத்திலிருந்த எலும்புகள் தம்மிற் கூடிப் பெண்ணுருவாகப் பூம்பாவை உயிரோடிருந்தால் எவ்வளவு வளர்ச்சியுற்றிருப்பாளோ அவ்வளவு வளர்ச்சியுடன் நின்று ஞானசம்பந்தரையும் பெற்றோரையும் ஆண்டவனையும் வணங்கினாள். அது கண்டிருந்த மக்கட் கூட்டம் பெருமருட்கை கொண்டு பிள்ளையாரைப் பரவிப் பாராட்டினர். பிள்ளையார் சிவநேசருக்கு வேண்டுவன கூறித் தேற்றிவிட்டு மயிலாப்பூரின் நீங்கித் திருவான்மியூர் முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டே வந்து தில்லையைச் சேர்ந்தார்.

சிவபாதவிருதயர் தில்லைக்கு வந்து பிள்ளையாரைக் கண்டு பேரின்பத்தால் ஆண்டவனைப் பரவினார். பிள்ளையார் பல திருப்பதிகட்கும் சென்று வழிபட்டுக் கொண்டு சீகாழிப் பதியை யடைந்து தோணியப்பரைப் பல பதிகங்களாற் சிறப்பித்தார். பிள்ளையார் வருகையறிந்த திருநீலநக்கர் முருகநாயனார் முதலிய பெரியோர் சீகாழிக்கு வந்து பிள்ளையாரைக் கண்டு பேரின்பமுற்றனர்.

முடிவில் பெரியோர்கள் ஒன்றுகூடித் திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்வதென முடிபு செய்து அவரை வேண்டினர். அவரும் அவர்கள் வேண்டுகோட்கிசைந்தார். திருநல்லூரில் வாழ்ந்த கம்பாண்டார் என்பாருடைய மகளை[1] மணம் பேசினர். திருநல்லூரிலேயே திருமணம் செய்ய ஏற்பாடாயிற்று. கணிகள் குறித்த நன்னாளில் திருமணம் இனிது நடந்தது. திருமண முடிவில் மணமக்களும் மணத்திற்கு வந்திருந்த உறவினர் சான்றோர் முதல் அனைவரும் திருக்கோயிலுக்குச் சென்று இறைவன் திரு-


  1. மணமகளின் பெயர் இன்னதெனச் சேக்கிழாரால் குறிக்கப்படவில்லை. ஆயினும், திருநல்லூர்ப் பெருமணம் (ஆச்சாபுரம்) கோயிற் கல்வெட்டொன்றால் (A. R, No.,527 of 1918) அவர் பெயர் சொக்கியாரெனத் தெரிகிறதெனக் கல்வெட்டிலாகா ஆண்டறிக்கை கூறுகிறது (A. R. for 1919 para 3)