பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

சைவ இலக்கிய வரலாறு

வரலாற்றாராய்ச்சி

ஞானசம்பந்தர் வரலாற்றில் அவர் ஞானப்பால் உண்டதும், பொற்றாளம் பெற்றதும், முத்துத் சிவிகை முதலியன பெற்றதும், முயலகன் என்னும் நோய் நீக்கியதும், திருச்செங்குன்றத்தில் அடியார்க்குண்டான குளிர் நோய் போக்கியதும், பட்டீச்சுரத்தில் முத்துப்பந்தர் பெற்றதும், திருவாவடுதுறையில் பொற்கிழி பெற்றதும், திருத்தருமபுரத்தில் திருப்பதியம் யாழிலடங்காமை காட்டியதும், திருமருகலில் விடம் நீக்கியதும், திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றதும், திருமறைக்காட்டில் திருக்கதவம் அடைத்ததும், மதுரையில் தென்னவனுக்கு வெப்பு நோய் அகற்றியதும், அமணரொடு அனல்வாத புனல்வாதங்கள் புரிந்து வென்றதும், திருக்கொள்ளம்பூதுாரருகே ஆற்றில் ஒடம் செலுத்தியதும், போதிமங்கையில் புத்தன் தலையில் இடி வீழ்ந்ததும், திருவோத்துாரில் ஆண்பனை பெண்பனையானதும், திருமயிலையில் என்பு பெண்ணுருவாக் கண்டதும், திருமணக்கோலத்தில் பேரொளியிற் கலந்து மறைந்ததும் பேரற்புதங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றை வற்புறுத்தும் சான்றுகளும் வழக்காறுகளும், நூல்களிலும் கல்வெட்டுக்களிலும் உள்ளன; அவை பின்னர்க் காணப்படும்.

உடனிருந்த சான்றோர்கள்

ஞானசம்பந்தர் வரலாற்றில் மேலே குறித்த அற்புதங்கள் ஒழிய, அவர் திருநாவுக்கரசர் சீகாழிக்கு வர, அவரோடு அளவளாவி மகிழ்வதும், பின்பு திருப்புகலூர், திருமறைக்காடு, திருப்பூந்துருத்தி, திருவீழிமிழலை முதலிய இடங்களில் திருநாவுக்கரசருடன் கூடியிருந்து அருட்பாடல் வழங்குவதும் குறிக்கத்தகுவன. திருநீலநக்கர், முருகநாயனர், திருநீலகண்டயாழ்ப்பாணர், சிறுத்தொண்டர், பாண்டி வேந்தன் நெடுமாறனார், மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனர் முதலியோர் ஞானசம்பந்தர் காலத்தே இருந்தவராவர்.

திருஞானசம்பந்தருடைய திருப்பதியங்களில் அவராற்