பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

சைவ இலக்கிய வரலாறு

அறையுமூர் சாத்தமங்கை யயவந்தி மேல் ஆய்ந்த”[1] என்றும், முருகநாயனாரை, “தொண்டர் தண்கயமூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையும், கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன் செய்கோலம்”[2] என்றும், சிறுத்தொண்டரை, “செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணிசெய்ய”[3] என்றும், மங்கையர்க்கரசியாரை, “மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை வரிவளைக்கைம் மடமானி, பங்கயச்செல்வி பாண்டிமாதேவி பணிசெய்து நாடொறும்பரவ”[4] என்றும், குலச்சிறையாரை, “கொற்றவன் தனக்கு மந்திரியாய குலச்சிறை குலாவிகின்றேத்த”[5] என்றும் பாராட்டிப் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் காலம்

இனி, திருஞானசம்பந்தர் காலத்தைக் காண்டல் வேண்டும். இவரது காலத்தைப்பற்றி இதுகாறும் பல அறிஞர்கள் பலவேறு வகையான கருத்துக்களை வழங்கியுள்ளனர். திரு. சைமன் காசி செட்டியாரவர்கள், “சோழ பூருவபட்டயத்திற்” கண்டவாறு ஞானசம்பந்தர் நாவரசர், நம்பியாரூரராகிய மூவரது காலமும் ஒன்றே யென்றும், அஃது ஐந்தாம் நூற்றாண்டாகும் என்றும் கூறுவர். திரு. சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள், கூன்பாண்டியன் காலம் இரண்டாயிரம் ஆண்டுகட்குமுன்[6] என்பர்; எனவே அவர் கருத்துப்படி, ஞானசம்பந்தர் காலம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாம். கொழும்பு திரு. ஆனரபிள் P.குமாரசாமியவர்கள், விடந்தீண்டியிறந்த வணிகனை ஞானசம்பந்தர் எழுப்பிய வரலாறு கூறும் திருவிளையாடற் கூற்றுச் சிலப்பதிகாரத்திற் காணப்படுவது கொண்டும், சிலப்பதிகாரம் கி.பி. 113-135 வரையிருந்த கயவாகுவின் காலமாதல் கொண்டும் ஞானசம்பந்தர் அதற்குச் சில ஆண்டுகள்


  1. ஞானசம். 316: 11.
  2. ஞானசம். 228: 3.
  3. ஞானசம். 321: 1.
  4. ஞானசம். 378:1.
  5. ஞானசம். 378: 2.
  6. வீரசோழி, முன் பக். 17.