பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

சைவ இலக்கிய வரலாறு

நாதர் கோயிலுக்கு இராசசிம்மேச்சுரம் என்றொரு பெயருண்டு. இராசசிம்ம பல்லவன் இரணரசிகனை வென்ற உக்கிரதந்தனுக்கு மகனாவான்.அறிஞர் ஹூல்ஷ், (Dr. Hultszh) இரணரசிகனை மேலைச் சளுக்க வேந்தனான இரணராகன் என்பர். எனவே, இராசசிம்மன் இரணராகனுக்குப் பின்வந்த முதற் புலிகேசியின் காலத்தவன் என்பது பெறப்படும். புலிகேசி கி.பி. 567-இல் இருந்த கீர்த்திவன்மனுக்கு முன்னோனாவான். இராசசிம்மேச்சுரமான திருக்கற்றளி கி.பி.550-இல் கட்டப்பட்டிருக்க வேண்டுமென்பது அறிஞர் ஹூல்ஷ் (Dr. Hultszh) அவர்கள் கருத்து; அதனை அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள். அப்பர் பாடிய திருமேற்றளி இதுவாகுமாயின், அப்பர் காலத்தின் மேலெல்லைஆறாம் நூற்றாண்டாகும்.

“போக்சு (Foulks) என்பார் வெளியிட்டுள்ள பல்லவ மல்லன் செப்பேடும் கூரத்துச் செப்பேடும் இராசசிம்மனுக்குப் பின்வந்தவன் நரசிம்மவன்மனென்றும், அவன். சளுக்க வேந்தனை புலிகேசியை வென்று வாதாபிக்கரை அழித்தானென்றும் கூறுகின்றன. மற்று, பல்லவரிடத்தினின்று மீட்டு வாதாபி நகரைச் சீர் செய்தவன் முதல் புலிகேசி யென்றும், அவன் இராசசிம்மன் காலத்தவன் என்றும் தெரிவதால், வாதாபி நகரை யழித்த முதல் நரசிம்மன் காலத்தவன் இரண்டாம் புலிகேசியாதல் பெறப்படும். அவன் சகம் 532-இல் இருந்தவனாதலால் அவன் ஏழாம் நூற்றாண்டினன் என்பது தேற்றமாம். இதற்குமுன் செய்த ஆராய்ச்சியால் திருஞானசம்பந்தரை ஏழாம் நூற்றாண்டில் இருந்தவராதல் வேண்டுமெனக் கண்டோம். வாதாபி கொண்ட வரலாறு பெரியபுராணத்திற் கூறப்பட்டிருத்தலை முதன் முதலில் கண்டுரைத்தவர் திரு. V. வெங்கையரவர்களாவர்[1] இப்புராணப்படியே, சிறுத்தொண்டர் செய்த செயல்வகைகளுள் வடபுலத்துத் தண்டுபோய்வாதாபிதுகள்படுத்தது ஒன்று. சிறுத்தொண்-


  1. Ep. Indi. Vol. IV. p. 227. f. and Madras Christian College Magazine for Nov. 1893