பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

சைவ இலக்கிய வரலாறு

திரிகர் கி.பி. 641-ஆம் ஆண்டில் வாதாபி சென்று சில காலம் தங்கினர். அந்நகரத்தினதும் நகரத்தரசனதும் ஆகிய பெருமையை அவர் எழுதிய புத்தகத்தில் மிகப்பாராட்டியிருக்கின்றனர். அடுத்த கி. பி. 642-ஆம் ஆண்டில் பரஞ்சோதியார் பல்லவனது திரண்ட படையோடு குந்தள நாட்டரசனுடன் போர் செய்யச் சென்று மிக்க பராக்கிரமசாலியாகிய புலிகேசி II என்பானது தலைநகராகிய வாதாபியைத் துகளாக்கி அங்குப் பல்லவனது ஜயஸ்தம்பத்தை நாட்டினர். குந்தளராட்சி நிலைகுலைந்துபோய் விட்டது. வாதாபி நகரம் அதனோடு பாழாய்ப்போய் விட்டது. பதின்மூன்று வருஷகாலம் சளுக்கியராட்சி மங்கித் தத்தளித்துக்கொண்டிருந்தது. கி. பி. 655-ஆம் ஆண்டில் புலிகேசி II என்பானது மகன் விக்கிரமாதித்தன் I என்பான் கிருஷ்ணாநதிக்கு வடக்கேயுள்ள கல்யாணபுரம் என்னும் நகரத்தைத் தனது தலைநகராக்கினன். பரஞ்சோதியார் வாதாபி நகரத்தைப் பாழ்படுத்தியதை அடியில் கண்ட பெரிய புராணச் செய்யுள் விளக்கும். அது;

“மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித்
தொன்னகரம் துகளாகத்துளைநெடுங்கைவரை யுகைத்துப்
பன் பணியு நிதிக் குவையும் பகட்டினமும் பரித்தொகையும்
இன்னன எண்ணில கவர்ந்தே யிகலரசன் முன் கொணர்ந்தார்”

என்பது.

“நரசிம்மவன்மன் அவர் மூலமாக வெற்றி பெற்றதற்குப் பெருமகிழ்ச்சி கொண்டானேனும், அவர் தனது வழிபடு கடவுளாகிய சிவபெருமானது அணுக்கத் தொண்டரென அறிந்து அவரைத் தன்கீழ் வைத்து வேலை வாங்குவதனால் பெரிய சிவாபராதம் வருமென அஞ்சி அவருக்குத் திரண்ட நிதியும் மானியங்களும் கொடுத்துத் திருத்தொண்டு செய்து கொண்டு இஷ்டப்படி யிருக்க வேண்டினன். அவன் வேண்டுகோளுக்கிணங்கிப் பரஞ்சோதியார் தம்மூராகிய திருச்செங்காட்டங்குடி வந்து வதிந்தனர்.” பின்வரும் பெரியபுராணச் செய்யுட்கள் இதனை விளக்கும்.