பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருஞானசம்பந்தர்

59

நாவுக்கரசரை விட்டுப் பிரிந்து மதுரை சென்றதும் சமணரை வாதில் வென்றதும், பாண்டியனைச் சைவனாக்கியதும் யாவரும் அறிந்தனவே; மதுரையைவிட்டு நீங்கிப் பல தலங்கள் சென்று திருப்பூந்துருத்தி வந்து, திருநாவுக்கரசரைச் சந்தித்தனர். அவரை விட்டுப் பிரிந்து காழி சென்று உடனே வடபக்கம் யாத்திரை செய்தனர். காஞ்சிபுரம், திருவொற்றியூர், திருமயிலை முதலிய தலங்கள் சென்று பதிகம் பாடிச் சிவபிரானை வணங்கிச் சீகாழி வந்தனர். இவருக்கு மணம் புரியும் வயது வந்ததால் பெற்றோர் முதலாயினர் முயற்சியால் மணம் அமர்ந்ததும் சோதியிற் கலந்ததும் பலருக்கும் தெரிந்தனவே. இவர் சோதியிற் கலந்த காலத்து இவருக்கு ஆண்டு பதினாறு எனக் கீழ்க்கண்ட வெண்பா கூறும். அஃது,

“அப்பருக் கெண்பத்தொன் றருள் வாதவூரருக்குச்
செப்பிய நாலெட்டில் தெய்வீகம்—இப்புவியிற்
சுந்தார்க்கு மூவாறு தொன் ஞான சம்பந்தர்க்கு
அந்தம் பதினாறு அறி”

என்பது.

“சம்பந்தமூர்த்திகளைத் தவிர்த்து ஏனையோர்க்குப்பெரிய புராணம் வயது கூறவிலலை. ‘திருவளர் ஞானத் தலைவர் திருமணம் செய்தருளுதற்குப், பருவம் இது என்றெண்ணி அறிவிக்கும் பாங்கணைந்தார்’ என்று அப்புராணம் சொல்வதால் அவர்க்கு மணஞ்செய்யும் பருவம் வந்ததெனக் கொள்ளலாம். அக்காலத்தில் மணஞ்செய்யும் பருவத்தை ஆணுக்குப் பதினறும் பெண்ணுக்குப் பன்னிரண்டுமெனக் கொண்டிருந்தனர் என்று சொல்வதற்கு ஆதாரங்கள் பல உள. மணம் முடிந்த காலமும் சோதியிற் கலந்த காலமும் ஒன்றேயாதலால் இவருக்கு ‘அந்தம் பதினாறு’ என்று வெண்பாவில் கூறியிருப்பது பொருத்தமுடையதேயாம். திருநாவுக்கரையரைச் சீகாழியில் முதலில் சந்தித்தபோது இவருக்கு உபநயனமாகி விட்டது. எட்டாம் வயது நடைபெறுங் காலம். அதற்குப் பிற்கு சில காலம் சீகாழியில் தங்கியிருந்து