பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருஞானசம்பந்தர்

இடமுண்டு. குணதரவீச்சுரம் என்னும் கோயிலை அவன் கட்டினதாகத் தோன்றுகிறது. அப்பர் சுவாமிகள் கி.பி. 509-650 வரையுள்ள காலத்தில் 80 ஆண்டுகள் இவ்வுலகில் திகழ்ந்தனர் என்று யூகிக்க இடமுண்டு. திருஞானசம்பந்தர் கி. பி. 609-642 வரையுள்ள காலத்தில் 16 ஆண்டு நிலவுலகில் வாழ்ந்து சைவத்தை நிலைநாட்டினர் என்க”[1] என்று கூறுகின்றார்.

திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதியங்கள்

திருஞானசம்பந்தர் பாடியருளிய திருப்பதியங்கள் பதினாறாயிரம் என்று நம்பியாண்டார்நம்பி உரைத்துள்ளார். இதனை, அவர், “துன்றிய, பன்னுதமிழ்ப் பதினாறாயிரம்நற்பனுவல், மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும், முன்னிய, சிந்தனையால் சீரார் கவுணியர்க்கோர் சேயென்ன, வந்தங்கவதரித்த வள்ளலை”[2] என்றும், “—மொய்த்தொளிசேர், கொச்சைச் சதுரன்தன் கோமானைத் தான்செய்த, பச்சைப்பதிகத்துடன் பதினாறாயிரம்பா, வித்துப்பொருளைவிளைக்கவல பெருமான்”[3] என்றும் குறித்துள்ளார். இவருக்குப்பின்வந்த திருமுறைகண்ட புராணமுடையார், இவர் கூறியதையே, “தோடுடையசெவியன் முதல் கல்லூரென்னும் தொடை முடிவாப் பரசமயத் தொகைகள் மாளப், பாடினார் பதிகங்கள் பாவிலொன்றாம் பதினாறாயிரமுளதாப் பகருமன்றே”[4] என்று கூறுவாராயினர்.

இவற்றுள் திருமுறைகண்ட காலத்தில் திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதியங்களுள் முந்நூற்று எண்பத்து நான்கு திருப்பதியங்களே கண்டு தொகுக்கப்பட்டன. அதனைத்திருமுறைகண்டபுராணம், “பண்புற்ற திருஞான சம்பந்தர் பதிக முந்நூற்றெண்பத்து நான்கில் இலங்கு திருமுறை மூன்று”[5] என்று கூறுவது காண்க.


  1. திருஞானசம்பந்தர் சுவாமிகள் சரித்திரம் பக். 273.4
  2. ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை
  3. ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை 22.
  4. திருமுறைகண்டபுறாணம் செய். 14
  5. செய்யுள்: 25