பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

சைவ இலக்கிய வரலாறு

உட்கோள்

திருஞானசம்பந்தர் சிவபெருமான் திருவடிக்கே ஒன்றிய அன்புடையராய் அவர் திருவடியல்லது பிறிது நினையாத கடைப்பிடி யுடையவராய் இருத்தலால், “கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக் கருத்துடை ஞானசம்பந்தன்”[1] என எடுத்துக் கூறுவதோடு, “நின்றியூரில் உறையும் இறையல்லது எனது உள்ளம் உணராது”[2] “ஏகம் பத்து உறைவானையல்லாது உள்காது என் உள்ளமே”[3] “உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின், ஒண்மலரடியலால் உரையாது என் நா”[4] எனப் பல திருப்பதிகங்களில் அக் கருத்தை வற்புறுத்துகின்றார்.

இறைவன் இயல்பு கூறல்

இனி, ஞானசம்பந்தர் இறைவனைப்பற்றிக் கூறுவன அவர் காலத்துக் கடவுட் கொள்கையைக் காட்டுவனவாம். மணிமேகலையாசிரியர் காலத்தில் தமிழ் நாட்டில் நிலவிய சமயங்களுள் சைவமும் ஒன்று. மணிமேகலையோடு பேசிய சைவவாதி, தன் கடவுட் கொள்கையைக் கூறுமிடத்து,

“இருசுடரோடுஇயமானன்ஐம்பூதம் என்று
எட்டுவகை யுயிரும் யாக்கையு மாய்க்
கட்டி நிற்போனும் கலையுரு வினோனும்
படைத்து விளையாடும் பண்பி னோனும்
துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
தன்னில் வேறுதான் ஒன்றி லோனும்
அன்னோன் இறைவனாகும் என்று உரைத்தனன்;”[5]

எனவே, இக்கொள்கை திருஞானசம்பந்தர்க்கு முன்பே தமிழ்நாட்டில் நிலவிய சைவக்கொள்கையாதலை நன்கறியலாம். இதனை ஞானசம்பந்தர் பல திருப்பாட்டுக்களில் வற்புறுத்துகின்றார். சுடர் இரண்டு, இயமானன் ஒன்று, பூதம் ஐந்து ஆக எட்டு வடிவாக இறைவன் உளன் என்ற


  1. ஞானசம். 77.
  2. ஞானசம். 18.
  3. ஞானசம். 148.
  4. ஞானசம். 262.
  5. மணி.27:89-95.