பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருஞானசம்பந்தர்

71

கொள்கையை, "மண்ணொடு நீர் அனல்கனலோடு ஆகாயம் மதியிரவி, எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண்டிசையும், பெண்ணினொடு-ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்"[1] என்று எடுத்தோதுகின்றர். “இயமானன்” எனச் சைவவாதி கூறியது, உயிரையே வேள்வித் தலைவனையன்று என்றற்கு ஈண்டுக் காட்டியனவே சான்றாதல் காண்க. "உயிரும் யாக்கையுமாய்க் கட்டி நிற்போன்" எனச் சைவவாதி கூறியது, செய்த வினைக்கு ஏற்ப இறைவன் உயிர்கட்கு உடல் கருவிகளைப் படைத்துக் கூட்டி நிறுத்துவன் என்னும் சைவக் கருத்தாகும். இதனை ஞானசம்பந்தர், “உடல்வரை இன்னுயிர் வாழ்க்கையாய ஒருவன்”[2] எனக் குறிக்கின்றார். “கலையுருவினோன்” என்பது, “கலையவன் மறையவன் காற்றொடு தீ மலையவன், விண்ணொடு மண்ணுமவன்”[3] என்பதனால் வற்புறுத்தப்படுகிறது. “பேணுமூன்று உருவாகிப் பேருலகம் படைத்தளிக்கும் பெருமான்”[4] என்பது “படைத்து விளையாடும் பண்பினோன்” என்றதையும், “இருநிலனது புனலிடை மடிதர எரிபுக எரியது மிகுபெரு வளியினில் அவிதர வளிகெட வியனிடை முழுவதுகெட, இருவர்கள் உடல் பொறையொடுதிரி எழில்உரு உடையவன்”[5] என்பது "துடைத்துத் துயர்தீர் தோற்றத்தோனும்" என்றதையும், "விரை மலரோன் செங்கண்மால் ஈசனென்னும் மூவராய முதல் ஒருவன்"[6] எனவும், "மூவரும் இவரென்னவும் முதல்வரும் இவரென்னவும், மேவரும் பொருளாயினர்"[7] எனவும், “வருவன தன்னின் வேறுதான் ஒன்றில்லோனும்” என்றதையும் நிறுவுகின்றன.

இத்தகைய முதல்வன் உயிர்களிடத்தில் உயிர்க்குயிராப் உடனாய் நின்று, காண்பன கண்டும் காட்டியும் உதவுகின்றான் என்பாராய், "உரைசேரும் எண்பத்துநான்கு நூறாயிரமாம் யோனிபேதம் நிரைசேரப் படைத்து அவற்றின்


  1. ஞானசம். 184:3.
  2. ஞானசம். 363:1.
  3. ௸ 109:6
  4. ௸ 132:5.
  5. ௸ 22:7
  6. ௸ 53:1
  7. ௸ 214:6.