பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

சைவ இலக்கிய வரவலாறு

உயிர்க்கு உயிராய் அங்கங்கே நின்றான்”[1] என்றும், "புவி முதல் ஐம்பூதமாய்ப் புலனைந்தாய் நிலன் ஐந்தாய்க் கரணம் நான்காய், அவையவைசேர் பயனுருவாய் அல்லவுருவாய் நின்றான்"[2] என்றும் கூறுகின்றா. பயனுருவாயும் அல்ல வுருவாயும் நிற்கின்றான் ஆயினும் இறைவன் இவற்றின் வேறாயும் உடனாயும் இருப்பன் என்பதைப் "பல்கதிரோன் மதிபார் எற்றும்நீர் திக்காலும், மேலேவிண் இயமானனோடு மற்றுமாதோ பல்லுயிராய் மாலயனும் மறைகள் முற்றுமாகி வேறுமானான்”[3] எனவும், "ஈறாய் முதலொன்றாய் இருபெண்ணாண் குணமூன்றாய்...வேறாய் உடனானான்"[4] எனவும் பல பாட்டுக்களில் விதந்தோதிக் காட்டுகின்றார். இங்கே கூறிய உடனுதலாகிய உடனிலையையே பின்னர்ப் போந்த சித்தாந்த சைவ நூல் உரைகள் சுத்தாத்துவித நிலை எனக் கூறுவனவாயின.

இவ்வாறு தாம் கூறிப்போந்த இறைவனை, உண்டா இல்லையா என ஆராயும் ஆராய்ச்சி இனி வேண்டா: அவன் என்றுமுள செம்பொருள்; அவனை வழிபடுவதே செயற்பாலது என மக்களுக்கு ஞானசம்பந்தர் வற்புறுத்திக் கூறியுள்ளார். அவனது உண்மையினை ஆராய்ந்து காண்பதென்பது மக்கள் அறிவெல்லைக்கு இயலாதது என்ற கருத்துப்பட, "உம்பராலும் உலகின்னவராலும், தம்பெருமை அளத்தற்கரியான்"[5] என்று அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு, இறைவன், அரிய காட்சியனாயினும், ஆளப்படுவாரை அவன் ஆட்கொள்ளும் முறையும், அவர்கட்கு அருளும் வண்ணமும், பிறவும் அளவிறந்தனவாகும். அதனால் அவரவரும் தாம்தாம் அவன் திருவடிகளை வணங்கி வினைநீக்கமும் வீடுபேறுமே வேண்டற்பாலராவர் என்பது ஞானசம்பந்தர் நல்கும் நல்லுரை. "ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும், கேட்பான்


  1. ஞானசம். 182:4.
  2. ஞானசம். 129:7.
  3. ௸ 53:2.
  4. ௸ 11:2
  5. ௸ 29:5