பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 ச. பிற்காலப்பல்லவர்காலத்தில் சைவசமயம்-II

என்பவர் குறிக்கத்தக்கவர். உண்மைச் சிவனடியார்க்குத் தொண்டு செய்தல், உண்பித்தல் (மாகேசுவர பூசை), அவர்கள் கேட்டவற்றை ஈதல் என்பன சிவத்தொண்டாகும் என்பது சைவசமயக் கொள்கை. இத்துறையில் இயற்பகையார், நரசிங்கர் முதலியோர் குறிக்கத்தக்கவர். அளப்பரிய அன்பினாலும், சைவப்பற்றின் அழுத்தத்தாலும் கண்ணை அப்பிய கண்ணப்பர், சிவநிந்தை செய்தவரைநாவறுத்த சத்திநாயனார், தந்தையைக் கொன்ற சண்டீசர் முதலியோர் அழியாப்புகழ் பெற்றனர். இவர்கள் திருமூலர் குறித்த கடுஞ் சுத்தசைவர் பட்டியலில் இடம் பெறத்தக்கவர். மனத்தாலேயே கோயில் கட்டல், பூசித்தல் என்பன பூசலார், வாயிலார் என்பவரிடம் காணப்பட்டன.சிவத்தலங்கள்தோறும் சென்று பதிகங்கள் பாடிச் சைவத்தைப் பரவச் செய்தலும் வழிபாட்டு முறையாகும். அது செய்தவர் அப்பர் சம்பந்தர், சுந்தரர் முதலியோர். இறைவருக்குப் பூசை செய்தல், உணவு படைத்தல் என்பனவும் வழிபாட்டு முறையேயாகும். அவ்வழி நின்றவர் புகழ்த்துணையார், அரிவாள் தாயர் முதலியோர். அவரவர் சக்திக்கேற்றவாறு தொண்டு செய்து பயன்பெறலாம் என்று ஆகமங்கள் கூறலாலும், அவ்வழி நிற்றல் அனைவர்க்கும் எளிதாதலாலும், பொதுமக்கள் பலவாறாகச் சைவத்தை ஆதரிக்கலாயினர் என்று கொள்ளுதல் பொருந்தும். -

. நரபலி கொடுத்து வழிபடுதல் : சிறுத்தொண்டர் வடநாட்டிலி ருந்து வந்த பைரவத்துறவியின் விருப்பப்படி தம் ஒரே மகனைக் கொன்று கறி சமைத்து அத்துறவிக்குப் படைத்ததாகப் பெரியபுராணம் கூறுகிறது. இங்ங்ணம் நரபலி கொடுத்து வழிபடும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததா? - கி.பி. 6.7.8ஆம் நூற்றாண்டுகளில் பாசுபதர், காபாலிகர், காளாமுகர் என்பவர் பைரவர்க்கும் காளிக்கும் இரத்தத்தையும் மதுவையும் படைத்தனர்; உருத்திரன், காளி, சாமுண்டி ஆகியோர்க்கு வடஇந்தியாவில் கோவில்கள் இருந்தன என்பதும் காபாலிக பைரவாச்சாரியாரைப் பற்றிய வருணனையும் பாணர்எழுதிய ஹர்ஷ சரிதத்தில் இருக்கின்றன. எனவே, இவ்வழிபாட்டு வகைகள் பல்லவர் காலத்தில் தமிழகத்தில் இருந்திருத்தல் வேண்டும்.மாமல்லபுரத்திலும், திருச்சிக் குகைக் கோயிலிலும், புள்ள மங்கைச் சிவன்கோயிலிலும் துர்க்கைக்குத் தலையை அறுத்துத்தரும் பக்தர்களைக் குறிக்கும் சிற்பங்கள் காண்கின்றன. காளிக்கு ஒருவனைப் பலியிடத் தயாராக இருப்பதைக் குறிக்கும் சிற்பமும் மாமல்லபுரத்திற் காணலாம். இச்சிற்பங்களும், சிறுத்தொண்டர்-பல்லவர் காலத்தில் பைரவர்க்கும் துர்க்கைக்கும் மனிதரைப் பலியிட்டனர் - தலைகளைக் காணிக்கையாகத் தந்தனர் என்பதை உறுதிப்படுத்துகின்றன.'