பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ச கோயில்கள் மடங்கள்- சமய நிகழ்ச்சிகள்

வேறு சில நூல்கள்

இவையன்றி முதலாம் குலோத்துங்க சோழன் சரிதை, கன்னிவன புராணம், வல்லை அந்தாதி' என்பன கல்வெட்டுக்களிற் கூறப்பட்ட நூல்களுட் சில. சிறந்த சிவபக்தனான முதல் இராசராசன் வரலாறு திருப்பூந்துருத்திக் கோயிலிற் படிக்கப்பட்டாற் போலவே திருநீற்றுச் சோழனான முதற்குலோத்துங்கன் வீரத்தையும், சிவப்பற்றையும் விளக்கும் வரலாறு கோயில்களிற் படிக்கப்பட்ட தெனக் கோடலில் தவறில்லை.அம்மன்கன்னிகையாக இருந்து பாதிரிவனத்தில் சிவனை வழிபட்ட வரலாறும் அப்பர் வரலாறும் கூறுவதாக இருக்கக்கூடிய கன்னிவனபுராணம் அவ்வூர்க் கோயிலிலும் வேறு சில கோயில்களிலும் படிக்கப்பட்டிருக்கலாம். திருவல்லத்து ஈசனைப் பற்றிய வல்லை அந்தாதி அவ்வூர்க் கோயிலிலேனும் பாடப் பட்டிருக்கலாம். இந்நூலாசியர்கட்கு நிலம் வழங்கப் பட்டமையை நோக்க, அவர்தம் நூல்கள் பாராட்டப்பட்டன என்பது தெளிவு.

ஆளுடைய நம்பியூரீபுராணம்

இரண்டாம் இராசாதிராசன் (1166 - 1182) 9ஆம் ஆட்சியாண்டில் பங்குனி உத்தரத்து ஆறாந்திருநாளில் படம்பக்க நாயகதேவர் திருமகிழின் கீழ்த் திருவோலக்கம் செய்து எழுந்தருளியிருந்தபோது ஆளுடைய நம்பி ரீ புராணம் படிக்கப்பட்டது.இதனை இரண்டாம் இராசராசனும் கேட்டான்." என்று ஒற்றியூர்க்கல்வெட்டுக் கூறுகிறது. இங்குக் குறித்த புராணம் யாது?

சேக்கிழார் (கி.பி.1133-1150) தாம் பாடிய நூலை 'மாக்கதை" என்கிறார். இதனால், அது கொங்குவேள்மாக்கதை போன்றதொரு, அஃதாவது, ஒருவரைப்பற்றிய காவியம் என்பது புலப்படும். சேக்கிழார் தமது நூலுக்குத் திருத்தொண்டர் புராணம்" என்று பெயர் குறித்தனர். 'திருத்தொண்டர் என்ற பெயர் சுந்தரரையே குறிப்பதாகும் என்பது சேக்கிழார் கருத்து என்பதை, "சைவ முதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி" என்பதனால் அறியலாம். இது பற்றியே சேக்கிழார் தமது நூலைப் பெருங்காவிய இலக்கணம் பொருந்த நாட்டுச் சிறப்பு, நகரச்சிறப்பு முதலியவை அமைத்தும், சுந்தரரர் வரலாற்றை ஒரே தொடர்பாகக் கூறாது நூலின் முதல் - இடை - கடை என்னும் முப்பகுதிகளில் வைத்தும், சுந்தரராற் குறிக்கப்பட்ட நாயன்மார் வரலாறுகளை இடையிடையே வைத்தும் முடித்துள்ளார். இதனால் சுந்தரரர் புராணமே திருத்தொண்டர் புராணம் என்பது அறியத்தகும்.