பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திருமந்திரம்

திருமூலர் வரலாறு (பெரிய புராணத்திற் கண்டபடி)

திருமூலர் நந்தியின் அருள் பெற்றவர்; பிராமணச் சிவயோகி; அணிமா முதலிய சித்திகளில் வல்லவர். இவர் பொதியமலையில் இருந்த அகத்தியரைக் காண விரும்பிக் கயிலாயத்திலிருந்து புறப்பட்டார்: வழியில் கேதாரம், நேபாளம், என்னும் இடங்களில் இருந்த சிவன் கோயில்களைத் தரிசித்துக் கங்கையில் நீராடினார்; பிறகு காசி, விந்தம், ரீசைலம் ஆகிய இடங்களைத் தரிசித்தார்; பின்பு காளத்தி, ஆலங்காடு, ஏகம்பம் தரிசித்தார்; காஞ்சியில் இருந்த யோகமுனிவர்களுடன் அளவளாவினார்; பிறகு திருவதிகையைத் தரிசித்துத் தில்லையை அடைந்தார்; நடராஜரது ஆனந்தக் கூத்தைக் கண்டார். பின்னர் காவிரியில் நீராடித் திருவாவடுதுறை அடைந்தார்: சிவனை வழிபட்டார்; பசுக்களின் துன்பத்தைப் போக்க, இறந்து கிடந்த மூலன் என்ற இடையன் உடம்பிற் புகுந்தார்; மூலன் மனைவியைக் கண்டதும் எட்டிநின்றார். அவ்வூர் அறிஞர்கள் இவரைப் பெரிய யோகி என்றதும் அவள் அகன்றாள். பிற்கு திருமூலர் தமது சொந்த உடம்பை விட்ட இடத்தில் தேடினார்.அஃது அகப்படவில்லை. அப்போது இவர், 'ஆகமப்பொருளைத் தமிழ்ப்படுத்தவேண்டும் என்பதற்காகக் கடவுள் தம் உடலை மறைத்து விட்டார், என்பதை உணர்ந்தார்; பிறகு திருவாவடுதுறை (இது கோயில் பெயர்) மேற்குப் பக்கத்தில் அரசமரத்தடியில்: யோகத்தில் இருந்து மூவாயிரம் பாடல்களைக் கொண்ட திருமந்திரத்தைச் செய்தார். இவரது இயற்பெயர் தெரியவில்லை. கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததால் இவர் பெற்ற பெயர் மூலன் என்பது.

திருமந்திரமும் காஷ்மீரச் சைவமும்

"திருமூலர் கயிலையிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 'கயிலாஸ் என்பது காஷ்மீரத்திற்கு வடகிழக்கில் உள்ள பெரிய மலைத் தொடரைக் குறிப்பது. காஷ்மீரத்தில்தான் ஆகமாந்தா என்னும் சைவ சித்தாந்தம் தோன்றியது. அஃது 28 சிவாகமங்களின் சத்தாகும். வேதங்கள், உபநிடதங்கள் இவற்றில் மறைந்து கிடக்கும் உண்மைகளை விளக்கிக் கூறுவனவே ஆகமங்கள். சைவ சித்தாந்தம்