பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி శ్మాు 79

5. பிற்காலப் பல்லவர் காலத்தில் சைவ சமயம் - I (கி.பி. 600-900)

கல்வெட்டுக்களில் சைவ சமயம்

முன்னுரை

சிம்மவிஷ்ணு மகனான மஹேந்திரவர்மன் காலமுதல் தென் இந்தியாவில் பல்லவராட்சி பெயரும் புகழும் பெற்றது. என்றும் அழியாத நிலையில் இருக்கத்தக்க குகைக் கோவில்களும், ஒற்றைக் கற்கோவில்களும், கற்களை உடைத்து அடுக்கிக் கட்டப்பட்ட கோவில்களும் இக்காலத்தேதான் தோன்றின. பல்லவ அரசர்கள் சிறந்த போர்வீரர்களாக இருந்தாற் போலவே சிறந்த பக்திமான்களாகவும் கல்விமான்களாகவும் கலைவளர்ச்சியில் ஆர்வம் கொண்டவராகவும்: இருந்தனர். அவர்கள் வடமொழியிலும் தமிழிலும் வல்லவராக விளங்கினர். அவர்கள் சைவ - வைணவ சமயங்களை வளர்த்தனர்; இசை - ஒவியம், சிற்பம் - நடனம், நாடகக் கலைகளை வளர்த்தனர். அவர்களது நீண்ட ஆட்சிக் காலத்திற்றான் (அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்னும் சைவசமயகுரவரும் பிற (முன் அதிகாரத்திற் கூறப்பெறாத) நாயன் மார்களும் இருந்து சைவத்தை வளர்த்தார்கள்; திருப்பதிகங்கள் தோன்றின. ஆழ்வார்கள் பன்னிருவரும் வைணவத்தை வளர்த்தனர்; அருட்பாடல்களைப் பாடினர். அப்பர் சம்பந்தரால் பல்லவநாட்டிலும் பாண்டிய நாட்டிலும் இருந்த சமணர் செல்வாக்கு ஒழிந்தது. வைணவமும் சமண - பெளத்த சமயங்களை ஒழிப்பதில் ஓரளவு பங்கு கொண்டது. சமய வளர்ச்சி, பல கலை வளர்ச்சி, உயர்ந்த கல்வி வளர்ச்சி இவற்றில் இப் பிற்காலப் பல்லவர் காலம் பொற்காலம் என்னலாம்.

இனி, இப் பிற்காலப் பல்லவர் யாவர் என்பதையும், அவர்களும் குடிகளும் எவ்வாறு சைவசமயத்தை வளர்த்தார்கள் என்பதையும் பட்டயங்களையும் கல்வெட்டுக்களையும் கொண்டு காண்போம்: