பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர் ஆட்சிக்காலத்தில் தமிழொடு சைவமும் மிக உன்னத நிலையினை அடைந்தது. தமிழகம் செய்த தவப்பயனால் அவதரித்த தமிழ்ஞானசம்பந்தர் அவர்களால் திருநெறிய தமிழில் பதிகப் பெருவழி தோற்றுவிக்கப்பட்டது. அவரது அடியொற்றி வந்த அருளாளர்களின் தொண்டினால் தமிழும் சைவமும் செழித்தோங்கி வளர்ந்தன. சோழர், பாண்டியர் காலம் சைவ சமய வரலாற்றின் பொற்காலம் எனலாம்.

பன்னிரு திருமுறைகள் தமிழ் சைவ சமயத்தின் அடிப்படை நூல்களாக அமைந்தன. மூவர் முதலிகளையும் மாணிக்க வாசகரையும் சமயத் தலைவர்களாகவும், சிவனை முழுமுதற் பொருளாகவும், மாறா இறையன்பு ஒன்றே வீடுபேற்றிற்கு வழி என்பதும், சாதி மத வேறுபாடின்றி ஆணும் பெண்ணும் இறையின்பத்தைத் துய்த்து வாழலாம் என்பதும், சமய வாழ்வு இவ்வுலக வாழ்க்கைக்கு எதிரானதல்ல என்ற கொள்கையும் சைவர்களால் ஏற்கப்பட்டன. இந்தக் கொள்கைகள் சமண சமயத்தின் கடினமான அறிவுக் கொள்கைக்கும், கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் உலக மறுப்புக்கும் மாற்றாக அமைந்தது மட்டுமல்லாமல் சமண சமயத்தின் நலிவுக்கும் காரணங்களாக அமைந்தன. சைவ சமயம் நாயன்மார்களை முன்னிருத்தி ஒரு மக்கள் இயக்கமாகவே உருப்பெற்று வளர்ந்தோங்கியது.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய மெய்கண்டார் ஆக்கிய சிவஞானபோதம் சைவ சமயத்தின் தத்துவக் கொள்கைகளை விளக்கும் முதல் அடிப்படை நூலாகும். அந்நூல் மொழிபெயர்ப்பு நூலல்ல என்பதற்கு அறிஞர்கள் போதுமான ஆதாரங்களைத் தந்துள்ளனர். சிவஞானபோதம் உட்பட சைவ சித்தாந்த சாத்திரங்கள் மொத்தம் பதினான்கு. சிவஞான போதத்திற்குப் பல உரைகள் இருப்பினும் சிவஞான முனிவரின் சிவஞானபோத-