பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழுத்தப்பட்ட ‘முதல் ஆய்வு நூல்’ இது என்றால் அது மிகையாகாது. எளியநடையில் இலக்கிய நயத்தோடு எழுதப்பட்ட சுவையான நூல் இது. ஆங்காங்கே சைவக் கருத்துகளுக்கு இணையான வைணவக் கருத்துகளையும் ஒப்புநோக்காகச் சுவைபட எடுத்துக் கூறி சமயப் பொறையின் இன்றியமையாமையை வலியுறுத்திச் செல்வது பாராட்டுக்குரியது.

தமிழகக் கலைமாமணி பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியாரவர்கள் இந்நூலின் ஆசிரியர். சைவம், வைணவம் ஆகிய இரண்டையும் தம் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்து வருபவர். சமயம், தத்துவம், இலக்கியம், சமூகவியல், அறிவியல் போன்ற துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதித் தமிழக எழுத்துலகில் மிகப்பெரும் சாதனை படைத்தவர். பிறர் குறை காணாது நிறை மட்டுமே காணும் பண்பாளர். என் போன்ற எளியோரை அன்பால் நெறிப்படுத்தும் குணக்குன்று. அனைத்துச் சமயங்களுக்கும் அடிப்படை சமயங்கடந்த மெய்ப்பொருளே என்பதை வலியுறுத்தும் அருட்செல்வர். அன்னாரின் நீண்ட நெடிய அநுபவமும், நுண்ணறிவும் இந்த நூலில் விரவி மிளிர்வன படித்து இன்புறத் தக்கவை. பொதுமக்கள், மாணாக்கர்கள், ஆய்வாளர்கள் அனைவருக்கும் அரும்பெரும் கருத்துக் கருவூலமாகவும், விருந்தாகவும் இந்நூல் அமைந்துள்ளது என்பது வெள்ளிடை மலை.

சென்னை - 5

பெ. கிருஷ்ணன்

7–6-2001