பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நூல் முகம்

எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ

எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்

கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்

கழலடியே கைதொழுது காணின் அல்லால்

ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்

ஒக்க அடைக்கும்போது உணர மாட்டேன்

புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணிய னே.

-நாவுக்கரசர்

'வைணவமும் தமிழும்' எழுதி முடித்தபின் என் உள்ளிருந்து இயக்கும் கந்தவேள் ‘சைவமும் தமிழும்’ எழுதுமாறு பணிக்க அந்த ஆணை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக அதிபர் திரு இரா.முத்துக்குமாரசுவாமியின் மூலம் என்னை வந்தடைந்தது. அவனருள் இருந்தமையால் அத்தெய்வப்பணி யாதொரு இடையூறுமின்றி இனிதே நிறைவெய்தியது. சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் என்ற பெயரில் நூல் அமைந்து வெளிவருகிறது.

பக்தி இயக்க காலத்திற்கு முற்பட்டே காரைக்கால் அம்மையார் தொடங்கி, பக்தி இயக்க காலத்தில் பெருகி வளர்ந்த திருமுறை நூல்களின் பரப்பு மிக விரிந்தது; அவற்றையொட்டித் தோன்றிய சித்தாந்த சாத்திர நூல்களும் மிக விரிந்து பெருகின: கால வெள்ளத்தில் இன்று அதன்

__________

1. அப். தே. 6.99:1